கனடாவில் தமிழ் மாணவி மர்மநபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
குன்னூரைச் சேர்ந்த ராச்சல் ஆல்பெர்ட் என்ற மாணவி கனடாவில் டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக் கழகம் அருகே நடந்து சென்ற ராச்சலை வழிமறித்த மர்மநபர் கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயமடைந்தார்.
கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதுடன் துப்பாக்கியால் சுடப்பட்டதும் தெரியவந்துள்ளது. உடன்படிக்கும் சக மாணவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இந்தச் செயலைச் செய்தவர் 5 அடி 11 அங்குலம் இருக்கக்கூடிய ஆண் என்றும், ஆசியாவைச் சேர்ந்தவர் என்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் தெரிவித்ததாக கனடாவின் காவல் துறை தெரிவித்துள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவிக்கு உதவுமாறு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராச்சலின் உறவினர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதையடுத்து, மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்குமாறும், தேவையான உதவிகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் ராச்சலை நேரில் சென்று பார்த்துள்ளனர்.
0 Comments
No Comments Here ..