ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்த எமது ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொருளாதார முன்னேற்றம், அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்பாடு ஆகியவற்றுக்காகவே ரணில் விக்கிரமசிங்கவை அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
காலி – ரத்கம பகுதியில் செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரச தலைவர் கோட்டபய ராஜபக்ஷ பதவி விலகியவுடன் அரசியலமைப்பின் ஊடாக ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். ராஜபக்ஷர்கள் மீது திட்டமிட்ட வகையில் போலி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
ஒரு மாற்றத்தை நோக்கி ஜனாதிபதி பயணிக்கிறார். அவரின் கொள்ளை திட்டங்களை நிறைவேற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.
இலாபமடையும் அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தல் என்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை தனியார் மயப்படுத்துவது பிரச்சினைக்குரியது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு டெலிகொம் நிறுவனத்தின் பங்குகளை வழங்குவது தேசிய பாதுகாப்புக்கு ஏதாவதொரு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என பல தரப்பினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்குவோம்.அரச நிறுவனங்கள் மறுசீரமைப்பு தொடர்பில் விரிவாக ஆராய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம் என்றார்.
0 Comments
No Comments Here ..