உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நாம் தினசரி எடுத்துக்கொள்ளும் உணவுகள் விதவிதமானவை. அவற்றில், எப்போதும் முதல் இடம் முளைகட்டிய பயறுகளுக்கே! விளையாட்டு வீரர்கள், குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை என அனைவரும் சாப்பிட ஏற்ற அற்புதமான உணவுப் பொருள் இது. சாதாரணப் பயறுகளைவிட இவற்றில் ஊட்டச்சத்துகள் அதிகம். வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே புரோட்டீன்கள், நியாசின், தயாமின், அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஒமேகா அமிலம், இரும்புச்சத்து, ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்து உள்ளன.
ஆரோக்கிய விரும்பிகள் இவற்றைத் தேடிச் சென்று வாங்குகிறார்கள். `சாதாரண பயறுகளைவிட முளைவிட்ட பயறுகள் அப்படி என்ன ஸ்பெஷல்?' இந்த ஒற்றைக் கேள்வியைக் கேட்டால், அதிலிருக்கும் சத்துக்கள், கிடைக்கும் பலன்கள், அவற்றை எப்படிச் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம். பலன்கள்:
* முளைகட்டிய பயறுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலுக்குத் தேவையான எனர்ஜியைத் தருபவை. உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.
* வைட்டமின் ஏ நிறைந்திருக்கிறது. கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது; பார்வைத் திறனை மேம்படுத்தும்.
* இவற்றில் ஒமேகா அமிலம் அதிகமாக இருப்பதால், முடி வளர்ச்சிக்கும் உதவுகின்றன.
* அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், ஹார்மோன்கள் சீராகச் சுரக்க வழிவகுக்கின்றன. புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலைத் தருகின்றன..
* முளைகட்டிய பயறுகளில் உள்ள வைட்டமின் பி, மென்மையான சருமத்தைத் தருகிறது. தோல் புற்றுநோயைத் தடுக்கும். சருமம் புத்துணர்வு பெற உதவும்..
* இவற்றில் இருக்கும் சிலிக்கா நியூட்ரியன்கள் (Silica Nutrients), சருமத்தில் ஏற்படும் செல் இழப்பைத் தடுத்து, செல் பாதிப்பைத் தடுத்து, செல் மறுசீரமைப்புக்குத் துணைபுரிகிறது.
* அதிகப்படியான ஆன்டி ஒக்ஸிடன்ட் இவற்றில் உள்ளதால், நம் உடலில் ஏற்படும் டிஎன்ஏ மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்கள் சிறுவயதிலேயே பூப்பெய்துதலைத் தடுக்கிறது.
* இவற்றில் உள்ள பொட்டாசியம் உடலில் ரத்த ஓட்டம் சீராக உதவுகிறது; ரத்த விருத்திக்கும் உதவுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்படுவது போன்றவற்றைத் தடுக்கிறது. `அனீமியா' என்னும் ரத்தசோகை நோயைத் தடுக்கிறது.
உடலின் நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தி, நடுக்கத்தைச் சரிசெய்கிறது. முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை (Sprouted grains) வேக வைத்து சாப்பிடலாம் .
சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் (Cereals) செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள். முளைகட்டிய தானியங்களை நேரடியாக சாப்பிடுவதென்றால் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது.
ஏனெனில், இது செரிமானம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளும். சில நேரங்களில் வயிறு உபாதைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வயிற்றுப் பொருமல், வயிறு உப்புசம், ஜீரணம் ஆகாமல் அடிக்கடி ஏப்பம் வருதல், சில நேரங்களில் வயிறு இரைந்து பேதி செல்லல் போன்றவைகள் ஏற்படலாம்.
அதனால் முளைகட்டிய தானியங்களை லேசாக வேகவைத்து சாப்பிட்டால் ஒருவர் 50 கிராம் அளவு வரை சாப்பிடலாம்.குறிப்பாக முளை கட்டிய பயறு வகைகளை சாப்பிட காலை நேரம் உகந்தது. மாலை வேளையிலும் தேநீர் சாப்பிடும் நேரத்தில் உட்கொள்ளலாம்.
0 Comments
No Comments Here ..