08,May 2024 (Wed)
  
CH
வாழ்வியல்

குழந்தைகளின் மனநிலை அறிந்து பெற்றோர் செயற்படவேண்டும்

குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும். குழந்தைகள் நாம் இயக்கும் வெறும் இயந்திரமல்ல. அதனால் அவர்களை பெற்றோரும் மதிப்புடன் நடத்த வேண்டியது அவசியம்.


குழந்தைகளை எதிர்காலத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்க, அவர்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடைய மனநிலையை புரிந்துகொண்டு, எது சரி? எது தவறு? என்பதை சரியான முறையில் சொல்ல வேண்டும். குழந்தைகளின் தேவைகள் என்னவென்று புரிந்துகொண்டு, அவர்களை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். அதே நேரத்தில் குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.


'இந்த விஷயத்தை செய்யாதே' என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. உனக்கு காய்ச்சலாக இருக்கிறது. அதனால், ஐஸ்க்ரீம் இப்போது சாப்பிட வேண்டாம். காய்ச்சல் குணமானவுடன் ஐஸ்க்ரீம் நானே வாங்கித் தருகிறேன். சரியா? என்பதுபோல் அவர்களுக்குப் புரிய வையுங்கள். அதுதான் சரியான வழிமுறை. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள்.


பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள். இதனால் தாய், தந்தை இருவருமே குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.


 மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும். 'பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் திருத்தி நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், அவர்களுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும் என்பதற்காகவும் சில சமயங்களில் கடுமையான முறையில் நடந்துகொள்கிறார்கள்.




குழந்தைகளின் மனநிலை அறிந்து பெற்றோர் செயற்படவேண்டும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு