15,Jan 2025 (Wed)
  
CH
இலங்கை செய்தி

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை வெளிப்படையாக கூறவில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு வெளிப்படையாகக்கூறாமல், மறைமுகமாக அதனை வலியுறுத்தியிருப்பதன் மூலம் மீண்டும் தமிழ்மக்களுக்கு துரோகம் இழைத்திருக்கின்றது என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 20 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நிலையில், அவரிடம் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்களை உள்ளடக்கிய கடிதங்களைத் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ளன.


அதன்படி இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சியினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தின் உள்ளடக்கம் மற்றும் அதன் உண்மையான பின்னணி குறித்து விளக்கமளிக்கும் வகையில் செவ்வாய்கிழமை (18) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், 21 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் நடைபெறவுள்ள சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுவதுடன் இதன்போது தமிழ்மக்களின் அரசியல் மற்றும் அன்றாடப்பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

எனவே அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் உள்ளடங்கலாக ஒற்றையாட்சி முறையின் கீழான எந்தவொரு தீர்வையும் நிராகரிக்கும் அதேவேளை, தமிழ்மக்கள் சுயநிர்ணய உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு வழிவகுக்கக்கூடிய சமஷ்டி முறையிலான தீர்வை இந்தியா வலியுறுத்தவேண்டுமெனக்கோரி நாம் இந்தியாவுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.



அதேவேளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இருந்து பிளவுபட்டு இயங்கும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும், சி.வி.விக்கினேஸ்வரனும் இணைந்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் அதில் 13 ஆவது திருத்தம் மாத்திரமே வலியுறுத்தப்பட்டிருப்பதுடன், சமஷ்டி குறித்து எதுவும் கூறப்படாததன் காரணமாக அக்கடிதத்தில் கையெழுத்திடவில்லை என்று விளக்கமளித்த இலங்கைத் தமிழரசுக்கட்சி, இந்தியப்பிரதமர் மோடிக்குத் தனியாகக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில் ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் திகதி ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து இந்தியாவுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த கடந்தகால வரலாறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.


அவற்றுக்கு மேலதிகமாக இம்முறை என்ன விடயம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது என்று பார்த்தால், 'இலங்கை அரசினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்' என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. மாறாக சமஷ்டி முறையிலான தீர்வு வலியுறுத்தப்படவில்லை.

ஆக, இதுவரையான காலமும் இலங்கை தமக்கு வழங்கிய வாக்குறுதியாக இந்தியா எதனைக் கருதுகின்றது என்று பார்க்கவேண்டியுள்ளது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மற்றும் அதற்கு அமைவாக மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடத்துதல் ஆகியவற்றையே இலங்கை வழங்கிய வாக்குறுதிகளாக இந்தியா கருதுகின்றது என்பதைக் கடந்த காலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்திய வதிவிடப்பிரதிநிதி ஆற்றிய உரை, இலங்கை விஜயத்தின்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆற்றிய உரை போன்றவற்றின் மூலம் அறிந்துகொள்ளமுடிகின்றது.

எனவே அதனையே மீண்டும் வலியுறுத்தியிருப்பதன் ஊடாக தமிழரசுக்கட்சி தமிழ்மக்களுக்கு மீண்டும் அதே துரோகத்தைச் செய்திருக்கின்றது என்று குறிப்பிட்டார். 

 





இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை வெளிப்படையாக கூறவில்லை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு