19,May 2024 (Sun)
  
CH
உலக செய்தி

பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு - சீனா செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளவர்களின் எண்ணிக்கையும் 11 ஆயிரம் ஆக அதிகரித்துள்ளது

இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு இந்த வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பியவர்களுக்கு இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் கொரோனா வைரஸ் தாக்குதலை சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்குதலை முறியடிப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும்.

உலக சுகாதார நிறுவன தலைவர் கேப்ரியேசஸ் கூறும்போது, “குறைவான சுகாதார வசதிகள் உள்ள நாடுகளில் இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளது என்பதே எங்களின் மிகப்பெரிய கவலையாக இருக்கிறது” என்றார்.

சர்வதேச சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்திதொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்தே சீன அரசு தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மக்களின் சுகாதாரம் முக்கியம் என்ற பொறுப்பு காரணமாக மிகவும் விரிவான, அதிதீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுபோன்ற பல நடவடிக்கைகள் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகளின் தேவைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இந்த தொற்றுநோய் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுவோம் என்ற உறுதியும், முழு நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்துடன் சீன அரசு நெருங்கிய தகவல் தொடர்பில் இருப்பதுடன், சிறந்த ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.

இவ்வாறு ஹுவா சுன்யிங் கூறியுள்ளார்.

இதற்கிடையே அமெரிக்கா தனது குடிமக்களை சீனாவுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை இதுதொடர்பாக 4-ம் நிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்கர்கள் சீனாவுக்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சீனாவில் இப்போது இருக்கும் எந்த நாட்டை சேர்ந்தவர்களும் வர்த்தக விமானத்தில் புறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இங்கிலாந்தில் முதல் முறையாக 2 பேருக்கு இந்த வைரஸ் தாக்குதல் உறுதியாகி உள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு இந்த வைரஸ் தாக்கியுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி கிறிஸ் வைட்டி கூறியுள்ளார்.

அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்றும், வைரஸ் மற்றவர்களுக்கு பரவுவதை தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.




பலி எண்ணிக்கை 259 ஆக உயர்வு - சீனா செல்ல வேண்டாம் என குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு