20,May 2024 (Mon)
  
CH
WORLDNEWS

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் கடல் பாதைகளை பாதுகாக்கும் நடவடிக்கை!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பிற்கு உதவி செய்வதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதே, பெப்ரவரி 23 - 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மா அரசாங்கம், சிவில் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களுக்கு தெரிவித்த செய்தியாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரைச் சந்தித்த செயலாளர் வர்மா இலங்கையினை நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் தொடர்ந்தும் வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்ட அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் உட்பட இலங்கையில் மேற்கொள்ளப்படும் சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடினார்.

மனித உரிமைகள் மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படைச் சுதந்திரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் பிரதிச் செயலாளர் வர்மா வலியுறுத்தினார். தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும் ஒரு அதிக ஸ்திரத்தன்மையுடைய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்துவதற்கும் இலங்கை கடற்படையின் திறன்களை பலப்படுத்துவது உட்பட, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் அவர்கள் ஆராய்ந்தனர்.


பெப்ரவரி 23 ஆம் திகதி, அமெரிக்காவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட மூன்று முன்னாள் அமெரிக்க கடலோரக் காவல்படை கப்பல்களில் ஒன்றான SLNS விஜயபாகு கப்பலுக்குச் சென்ற பிரதிச் செயலாளர் வர்மா பின்வருமாறு கூறினார். “நடுத்தர தாங்குதிறன் கொண்ட ஒரு நான்காவது கப்பலையும் இலங்கைக்கு வழங்குவதற்கான தனது நோக்கத்தை இராஜாங்கத் திணைக்களம் காங்கிரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளதென்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த முயற்சிக்கு நிதியளிப்பதற்காக வெளிநாட்டு இராணுவ நிதியளிப்பாக 9 மில்லியன் டொலர்களை திணைக்களம் ஒதுக்கியது. காங்கிரஸின் அறிவிப்புக் காலம் நிறைவடைந்த பின்னர், கப்பலை இலங்கைக்கு வழங்குவதற்கு நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தப் பரிமாற்றம் நிறைவடைந்தால், அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை அது மேலும் பலப்படுத்தும். இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார வலயத்தில் ரோந்து செல்வதற்கும், அதன் தேடுதல் மற்றும் மீட்புப் பகுதியைக் கண்காணிப்பதற்கும், இந்து சமுத்திரத்தின் பரபரப்பான கடல் வழித்தடங்களைக் கடந்து செல்லும் அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் மேலதிக பாதுகாப்பை வழங்குவதற்குமான இலங்கையின் திறனை இந்தக் கப்பல் அதிகரிக்கும். 


கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டபோது அங்கு இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித்த பண்டார தென்னகோன், இலங்கை கடற்படையின் கட்டளைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.


“அமெரிக்கா முன்னர் இலங்கை கடற்படைக்கு மூன்று கப்பல்பளை வழங்கியுள்ளது. கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமுலாக்க பணிகள், மனித கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் ஆகிய பணிகளுக்காக இந்த கப்பல்கள் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் கால பதிலளிப்பு நடவடிக்கைகளுக்கும் அவை உதவி செய்கின்றன. நான்காவது கப்பலின் இந்தப் பரிமாற்றமானது, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் காணப்படும் ஒத்துழைப்பின் ஒரு நீண்ட வரலாற்றில் மற்றுமொரு முக்கிய புள்ளியாகும்.” என தூதுவர் சங் குறிப்பிட்டார்.


கொழும்பு துறைமுகத்திலுள்ள ஒரு ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையமான மேற்கு கொள்கலன் முனையத்திற்கும் (WCT) பிரதிச் செயலாளர் வர்மா விஜயம் செய்தார். அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனத்தின் 553 மில்லியன் டொலர் நிதியளிப்புடன், கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் (CWIT) பிரைவட் லிமிடட் இனால் தற்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மேற்கு கொள்கலன் முனையமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு இன்றியமையாத ஒரு உட்கட்டமைப்பை வழங்கும். 2021 ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட தனது முழு கொள்ளளவுடன் இயங்கும், கொழும்பு துறைமுகத்தின் இப்புதிய இணைப்பானது துறைமுகத்தின் மிகவும் ஆழமான முனையமாக அமைவதுடன், இலங்கையின் இறையான்மைக் கடன்களை அதிகரிக்காமல், கொழும்பு துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்துக் கொள்ளளவை அதிகரிப்பதையும், பிரதானமான கப்பல் வழித்தடங்கள் மற்றும் சந்தைகளை இணைக்கும் முதன்மை ஏற்பாட்டியல் மையமாக அது வகிக்கும் பங்கை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் பற்றி: ரிச்சர்ட் ஆர். வர்மா முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளராகப் பணியாற்றுகிறார். இந்தப் பதவியில், அவர் திணைக்களத்தின் தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாகச் செயற்பட்டு, நவீனமயமாக்கல், வெளிநாட்டு உதவிகள் மற்றும் பலதரப்பட்ட பணியாளர்கள் தொடர்பான விடயங்களிலும் மூலோபாயம் தொடர்பான விடயங்களிலும் திணைக்களத்தின் முயற்சிகளை வழிநடத்துகிறார். பிரதிச் செயலாளர் வர்மா முன்னர் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவராக பணியாற்றி, மிகப்பெரிய அமெரிக்கத் தூதரகங்களில் ஒன்றான இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை வழிநடத்தியதுடன் இருதரப்பு உறவுகளில் வரலாற்று ரீதியான முன்னேற்றங்களை அடைவதற்கும் பங்காற்றினார்.




இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியில் கடல் பாதைகளை பாதுகாக்கும் நடவடிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு