அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா ஓவல் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்படுவது போல் சித்தரிக்கும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான காணொளி ஒன்றை, தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் போலியான காணொளி, 2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி ஒபாமாவிற்கும் ட்ரம்பிற்கும் இடையே நடந்த ஓவல் அலுவலக சந்திப்பில் கையாளப்பட்ட காட்சிகளாகத் தெரிகிறது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2016 தேர்தலின் போது ஒபாமா ட்ரம்பின் பிரச்சாரத்திற்கு தீங்கு விளைவிக்க முயன்றதாக ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் பின்னணியில் இந்த போலிக் காணொளியை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.
இந்த குறுகிய காணொளி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு, டிக்டோக்கில் பதிவேற்றப்பட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரம்பின் உத்தியோகபூர்வ சமூக ஊடகக் கணக்கில் மீண்டும் வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
போலியான இந்தக் காணொளியில், கு.டீ.ஐ. முகவர்கள் (FBI முகவர்கள்) ட்ரம்பும் ஒபாமாவும் நடத்தும் சந்திப்பின் இடையில் நுழைந்து, ஒபாமாவை மண்டியிடும் நிலைக்குத் தள்ளி, கைவிலங்குகளை மாட்டுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அதைப் பார்த்து ட்ரம்ப் சிரிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெறுகின்றன.
காணொளியின் ஆரம்பத்தில் ஒபாமா மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், "யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல" என்று கூறும் உண்மையான காட்சிகளின் தொகுப்பு காட்டப்பட்டுள்ளது. இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.
0 Comments
No Comments Here ..