காஸாவில் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே 6 வார கால போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார். முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானின் தொடக்கத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இது குறித்து கூறியுள்ளதாவது: புதிய இளம்பிறையுடன் முஸ்லிம்களின் புனித மாதமான ரமாலான் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில், அமெரிக்காவிலும், உலகின் பிற பகுதிகளிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரமலான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆண்டின் ரமலான் மாதம், காஸா மக்களின் கடுமையான துயரத்துக்கு இடையே பிறந்துள்ளது. ரமலான் மாதத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் நோன்பு திறக்கும் அதே வேளையில், காஸா மக்கள் அனுபவித்து வரும் துன்பம் ஏராளமானவர்களின் மனக் கண் முன் வந்து நிற்கும். அந்த நினைவுகள்தான் என் மனக் கண் முன்னும் நிற்கின்றன.
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பலர் அமெரிக்க முஸ்லிம்களின் குடும்ப உறுப்பினர்கள். இதுமட்டுமின்றி, காஸா போரால் சுமார் 20 லட்சம் பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி, போதிய உணவு, குடிநீர், உணவு, உறைவிடம் இல்லாமல் தவித்துவருகின்றனர். இந்தச் சூழலில், காஸா பகுதியில் ஏற்கெனவே அளிக்கப்பட்டுவரும் உயிர்க்காப்பு நிவாரணப் பொருள்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவிருக்கிறேன். அண்மையில்கூட, காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்படுவதை அதிகரிகரிப்பதற்காக அந்தப் பகுதியில் தற்காலிக துறைமுகம் ஒன்றை அமைக்குமாறு ராணுவத்துக்கு உத்தரவிட்டேன்.
நிவாரணப் பொருள்களின் விநியோகத்துடன் நில்லாமல், காஸாவில் குறைந்தபட்சம் 6 வார காலத்துக்காவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியை மேலும் தீவிரப்படுத்துவேன். காஸா போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கான சர்வதேச முயற்சிக்கு அமெரிக்கா தலைமை வகிக்கும்.
அதுமட்டுமின்றி, போருக்குப் பிறகு காஸா பகுதியில் நிலைத்தன்மை, பாதுகாப்பு, அமைதி நீடிப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும். அந்த முயற்சிகளில், சுதந்திரம், கெüரவம், பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை பாலஸ்தீனர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இரு தரப்பினருமே பகிர்ந்துகொள்வதற்கு வகை செய்யும் இரட்டை தேசத் தீர்வை (இஸ்ரேலும், பாலஸ்தீனும் ஒன்றையொன்று அங்கீகரித்துக்கொண்டு தனித் தனி நாடுகளாகச் செயல்படுவது) ஏற்படுத்துவதும் ஒன்றாகும் என்றார் ஜோ பைடன்.
இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினர் கடந்த அக். 7 ஆம் திகதி நுழைந்து 1,200 க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். அத்துடன் சுமார் 240 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. எனினும், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.
0 Comments
No Comments Here ..