சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இந்தோனேசிய ஆண் ஒருவர் தனது மனைவி பெண் வேடமிட்ட ஆண் என்பதை கண்டுபிடித்து பெரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். 26 வயதான கணவர் திருமணமாகி 12 நாட்களுக்குப் பிறகுதான் தனது மனைவி ஆதிண்டா கன்சா ஒரு ஆண் என்பதைத் தெரிந்துகொண்டார்.
ஆதிண்டா கன்சாவை 2023இல் சமூக ஊடகம் மூலம் இருவரும் அறிமுகமானதாகச் சொல்கிறார் ஏ.கே.. அவருடன் பழகியது பிடித்துப்போனதால், நேரில் சந்திக்க முடிவு செய்தார். அவர்கள் சந்திக்கும்போது எப்போதும் ஆதிண்டா தனது முழு முகத்தையும் மறைக்கும் முஸ்லீம்களின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தாராம்.
ஆனால் ஏ.கே. ஆரம்பத்தில் தனது மனைவி இவ்வாறு ஹிஜாப் அணிவது பற்றிக் கவலைப்படவில்லை. இஸ்லாத்தின் மீது கொண்ட பக்தியின் அடையாளமாகவே கருதினார். இந்த உறவு தொடர, இறுதியில் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.
அப்போது, திருமணத்தில் கலந்துகொள்ள தனக்கு குடும்பத்தினர் யாரும் இல்லை என்று ஏ.கே.யிடம் கூறினார். எனவே சென்ற ஏப்ரல் 12ஆம் தேதி ஏ.கே. வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடத்தது. திருமணத்திற்குப் பிறகும், ஆதிண்டா தனது புதிய கணவரிடமிருந்து தொடர்ந்து தனது முகத்தை மறைத்து வந்திருக்கிறார்.
ஏ.கே.வின் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பழகவும் மறுத்துவிட்டார். ஏ.கே.யுடன் நெருக்கமாக இருப்பதை தவிர்ப்பதற்காக புதிய புதிய காரணங்களைக் கண்டுபிடித்துக் கூறியிருக்கிறார் ஆதிண்டா. மாதவிடாய் நாட்களில் இருப்பதாகவும், உடல்நிலை சரியில்லை என்றும் வெவ்வேறு காரணங்களைக் கூறி விலகியே இருந்திருக்கிறார்.
12 நாட்கள் ஆகியும் இதே நிலை தொடர்ந்ததால், ஆதிண்டாவின் சந்தேகத்திற்கிடமான நடத்தைக்கு என்ன காரணம் என்று விசாரித்தார் ஏ.கே. அப்போது, ஆதிண்டாவின் பெற்றோர் இன்னும் உயிருடன் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். அவர்களுக்கு இருவரும் திருமணம் செய்துகொண்டு பற்றியும் எதுவும் தெரியவில்லை.
தொடர்ந்து விசாரித்தபோது, ஆதிண்டா உண்மையில் ஒரு ஆண் என்பதையும் ஏ.கே. கண்டுபிடித்தார். உடனடியாக இதுபற்றி போலீசாரிடம் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில், ஆதிண்டா 2020ஆம் ஆண்டு முதல் பெண் போல உடை அணியத் தொடங்கி, பெண் போல நடந்துகொள்ள முயன்றது தெரியவந்தது.
ஆதிண்டா ஏ.கே.யின் குடும்பச் சொத்துக்களுக்கு ஆசைப்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார் என்றும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரைக் கைது செய்தனர். உரத்துப் பேசும்போது ஆதிண்டாவின் குரல் ஒரு பெண்ணின் குரல் போலவே உள்ளது என்றும் இதை பயன்படுத்தி பெண் போல நன்றாக நடித்து ஏமாற்றி இருக்கிறார் என்று போலீசார் கூறுகின்றனர்.
“அவர்களுடைய திருமணப் புகைப்படங்களைப் பார்த்தால், ஆதிண்டா ஒரு நிஜப் பெண்ணாகவே தெரிகிறார். மென்மையான குரல் கொண்டவர் என்பதால், அவர் பெண் என்பதில் சிறிதும் சந்தேகம் ஏற்படவில்லை” எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர். பெண் போல வேடமிட்டு ஏமாற்றிய ஆதிண்டாவுக்கு இந்தோனேஷிய சட்டப்படி நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
0 Comments
No Comments Here ..