இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த 12 நாட்களாகத் தொடரும் மோதலில், நேற்று (ஜூன் 23) இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தபோதிலும், இரு தரப்பிலும் தாக்குதல்களும், பதிலடிகளும் தொடர்வதால் மத்திய கிழக்கில் பதற்றம் தணியவில்லை.
இந்தச் சண்டையில் அமெரிக்கா தலையீடு செய்தால், சரிசெய்ய முடியாத விளைவுகளைச் சந்திக்கும் என ஈரான் ஏற்கெனவே எச்சரித்திருந்தது.
போர் நிறுத்த அறிவிப்புக்கு முன்னும் பின்னும்
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 22) ஈரானில் உள்ள அணுஆயுத திட்டங்களைச் செயல்படுத்தும் இடங்களில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதற்குப் பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மீதும், கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளம் மீதும் தாக்குதல் நடத்தியது.
இந்தச் சூழ்நிலையில்தான் நேற்று இரவு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல்-ஈரான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக அறிவித்தார்.
ஆனால், டிரம்பின் போர் நிறுத்த அறிவிப்புக்கு முன்னரே இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்கமாட்டோம் என ஈரான் அறிவித்தது. இதையடுத்து, இன்று (ஜூன் 24) காலை இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
தொடரும் பதிலடி அச்சுறுத்தல்கள்
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதாக ஈரான் தெரிவித்தாலும், போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின்னும் சுமார் இரண்டரை மணி நேரம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஒருவேளை இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், ஈரானும் பதில் தாக்குதல் நடத்தும் என்பதால் போர் நிறுத்த ஒப்பந்தம் பயனற்றுப் போய்விடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் நிறுத்தத்திற்கு முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள் அதற்கு குந்தகம் விளைவிக்கும் என நினைக்கிறார். இதனால், இஸ்ரேல் தனது விமானிகளை உடனடியாகச் சொந்த நாட்டிற்குத் திரும்ப அழைக்கும்படி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலைமை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி, சர்வதேச நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.













0 Comments
No Comments Here ..