இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மதக் கல்வி கற்கும் மாணவர்களுக்கான கட்டாய இராணுவச் சேவையில் இருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை நிறைவேற்றத் தவறியதால், அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் ஷாஸ் கட்சி புதன்கிழமை கூட்டணி அரசில் இருந்து விலகியது.
காசாவுடனான போர் 21 மாதங்களாக நீடிக்கும் சூழலில், இந்த இராணுவச் சேவை விலக்கு விவாதம் இஸ்ரேலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மாணவர்களுக்கான இராணுவ விலக்கை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. புதிய இராணுவச் சேவை சட்டமூலத்தை நாடாளுமன்றம் (நெசெட்) உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் மத குருமார்கள், தங்களது இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்தால் மத வாழ்க்கையிலிருந்து விலகிவிடுவார்கள் என அஞ்சுவதால், புனித நூல்களைக் கற்பது புனிதமானது என்றும், தங்கள் இளைஞர்களுக்கு இராணுவச் சேவையிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
ஷாஸ் கட்சி விலகுவதற்கு ஒரு நாளுக்கு முன்பே, மற்றொரு அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் கட்சியான யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) கட்சியும் இதே காரணத்திற்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியது.
இந்த இரண்டு முக்கிய கட்சிகளின் விலகல், நெதன்யாகுவின் அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஷாஸ் கட்சி 11 இடங்களையும், யுனைடெட் தோரா ஜூடாயிசம் (UTJ) 7 இடங்களையும் கொண்டிருந்தன. இந்த இரு கட்சிகளின் வெளியேற்றத்திற்குப் பிறகு, நெதன்யாகுவின் கூட்டணிக்கு தற்போது வெறும் 50 இடங்கள் மட்டுமே உள்ளன. பெரும்பான்மைக்கு 61 இடங்கள் தேவை என்பதால், நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்து சிறுபான்மை அரசாங்கமாக மாறியுள்ளது.
0 Comments
No Comments Here ..