09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

1 கப்பல், 2 விமானம், 100 மரணம், 2000 ஐபோன் – நடந்தது என்ன?

கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுவிட்டனர்.

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள உள்ள 3,700 பேரில் 285 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த கப்பலில் 400 அமெரிக்கர்கள் இருந்தனர். அவர்களில் குறைந்தது 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களை மீட்கும் பணியை நேற்று அமெரிக்க முன்னெடுத்தது.

இரண்டு விமானங்களில் அவர்களை அழைத்துக் கொண்டு டோக்கியோவிலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) அதிகாலை அமெரிக்கா புறப்பட்டது.

ஆனால், அதே நேரம் சில அமெரிக்கர்கள் அந்த கப்பலிலிருந்து வெளியேற மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிப்ரவரி 19 வரை இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின் அந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் வெளியேறலாம்.

சில அமெரிக்கர்கள் 19ஆம் தேதிக்குப் பின் அந்த கப்பலிலிருந்து வெளியேற முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

மேத்யூ ஸ்மித் எனும் ஒரு பயணி, “நான் ஒரே பேருந்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்ய விரும்பவில்லை. அதனால், கப்பலிலேயே இருக்க முடிவு செய்துவிட்டேன். 19ஆம் தேதிக்கு பின் நான் அமெரிக்கா செல்வேன்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

கப்பலில் உள்ளவர்களுக்கு தகவல் தொடர்பில் உதவும் விதமாக 2000 ஐ-ஃபோன்களை ஜப்பான் அரசு அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு வழங்கி உள்ளது.

ஜப்பான் சுகாதார துறை ஒரு சுகாதார செயலியை உருவாக்கி உள்ளது. என்ன மருந்து எடுத்து கொள்ள வேண்டும், மனநல ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகள் போன்ற தகவல்கள் அந்த செயலி மூலம் வழங்கப்படும்.

சீனாவுக்கு வெளியே இந்த அளவு எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குழுமி இருப்பது அந்த சொகுசு கப்பலில் மட்டுமே.

நேற்று அதாவது பிப்ரவரி 16 சீனா சுகாதார துறை வழங்கி இருக்கும் தகவலின்படி ஹூபே மாகாணத்தில் 100 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 139ஆக இருந்தது.

புதிதாக 2048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 1933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனா முழுவதும் 70,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹூபேவில் மட்டும் 58,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1692 பேர் பலியாகி உள்ளனர்.

சீனாவுக்கு வெளியே 4 பேர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் தலா ஒருவர் பலி. முப்பது நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது.





1 கப்பல், 2 விமானம், 100 மரணம், 2000 ஐபோன் – நடந்தது என்ன?

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு