09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

மூளையில் ஆபரேசன் செய்தபோது வயலின் வாசித்த நோயாளி- இணையத்தில் வைரலாகும் வீடியோ

கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட நபர், அறுவை சிகிச்சையை பயமின்றி எதிர்கொண்டு, தான் விரும்பும் வாழ்க்கைக்கு திரும்புவது அவர்களுக்கு கொண்டாட்டமான விஷயம். ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நோயாளி, அறுவை சிகிச்சையின்போதே, பயமின்றி செய்த இந்த செயலைப் பார்த்தால் ஆச்சரியத்தையும், அதேசமயம் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

2013ம் ஆண்டில் இருந்து மூளையில் ஏற்பட்ட கட்டியால் அவதிப்பட்டு வந்த டாக்மர் டர்னர் என்ற 53 வயது பெண்ணுக்கு லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக தயாரான அந்த பெண், மருத்துவர்களிடம் தனக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது, வயலின் வாசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களும் அவரின் கோரிக்கையை ஏற்று வயலின் வாசிக்க அனுமதி அளித்துள்ளார்கள். அதன்படி டர்னருக்கு குறிப்பிட்ட அளவு மயக்க மருந்து கொடுத்து, மண்டை ஓட்டை திறந்து அறுவை சிகிச்சையை டாக்டர்கள் தொடங்கினர். அப்போது சிறிது நேரத்தில் மயக்க நிலையில் இருந்து மீண்ட டர்னர், வயலின் வாசிக்கத் தொடங்கினார்.

மூளையின் வலது முன்பக்கத்தில், இடதுகையின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் பகுதிக்கு அருகில் கட்டி இருந்தது. இடது தோள்பட்டையில் வயலினை வைத்து, வலது கையால் லாவகமாக இசைத்துள்ளார். அவர் வயலின் மீது முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தபோது மூளையில் இருந்த கட்டியை டாக்டர்கள் அகற்றினர். 

கண்களை மூடிக்கொண்டு அவர் வயலின் வாசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மூளையில் ஆபரேசன் செய்யும்போது, இது எப்படி சாத்தியம்? என பலரும் ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

சிக்கலான அறுவை சிகிச்சையின்போது வயலின் வாசிக்கும் தனது விருப்பத்தை செயல்படுத்த உதவிய டாக்டர்களுக்கு டாக்மர் டர்னர் நன்றி தெரிவித்துள்ளார். வயலின் மீது தனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும், 10 வயதிலிருந்தே வயலின் இசைப்பதாகவும் கூறியுள்ளார். 





மூளையில் ஆபரேசன் செய்தபோது வயலின் வாசித்த நோயாளி- இணையத்தில் வைரலாகும் வீடியோ

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு