09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

சீனாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உயிரிழப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரசின் தாக்கம் நீடித்த வண்ணம் உள்ளது. இங்கு வைரசுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் 9 பேர் இந்நோய்க்கு பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த 29 வயதான ஷியா சிசி என்ற பெண் டாக்டர் நேற்று உயிரிழந்துள்ளார். இதனால் மருத்துவ ஊழியர்கள் பலி 10 ஆக அதிகரித்துள்ளது.

இவர் வுகானில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்தவர். கடந்த ஜனவரி 19-ந்தேதி இவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்குள்ள பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 28-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரசுக்கு பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் வைரசுக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 152 பேருக்கு வைரஸ் பரவி இருப்பதை இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தி உள்ளது.

சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியாவில் இந்த வைரசின் தாக்கம் அதிகரித்துள்ளது. இங்கு வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 161 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

இதுவரை தென்கொரியாவில் 763 பேர் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 2 பேர் இறந்துவிட்டனர். இதனால் தென்கொரியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் ஈரானில் ஏற்கனவே வைரஸ் பாதிப்பில் 5 பேர் இறந்திருந்தனர். தற்போது மேலும் 3 பேர் பலியாகி உள்ளதால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இங்கு 43 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இத்தாலி நாட்டின் வெனிசில் இருந்து ரெயில் ஒன்று அண்டை நாடான ஆஸ்திரியா நாட்டின் முனிச் நகருக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 2 பயணிகளுக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ரெயிலை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பிரீன்னர் பாஸ் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது. வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலியின் மற்ற பகுதிகளில் இருந்து வரும் அனைத்து போக்குவரத்து சேவைகளும் துண்டிக்க திட்டமிட்டுள்ளதாக ஆஸ்திரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.




சீனாவில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு