தாம் ஒரு துரோகி அல்ல என்றும், நாட்டைக் காப்பாற்றவே பிரதமராக பொறுப்பேற்றுள்ளதாகவும் மலேசியாவின் புதிய பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
பிரதமராகப் பொறுப்பேற்ற பின் மலேசிய குடிமக்கள் மத்தியில் முதன்முறையாக உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் பதவிக்காக முன்னிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களுக்கும் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், அரசியல் நெருக்கடி தீவிரமடையும் வரை தமக்கு பிரதமராக வேண்டும் எனும் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.
நான் பிரதமர் பதவியை ஏற்பதா அல்லது மகாதீர் மொஹம்மத் பிரதமராக நீடிக்க ஆதரவு அளிப்பதா என்பது தொடர்பில் முடிவெடுப்பது கடினமாக இருந்தது. ஒருவேளை நான் மகாதீருக்கு ஆதரவு அளித்திருந்தால் அரசியல் முட்டுக்கட்டைகள் நீடித்திருக்கும்.
நாட்டு மக்கள் ஏற்கெனவே இந்த நெருக்கடியால் களைத்துப் போய்விட்டனர். ஒரு தலைவராக இந்நிலை மாற தீர்வுகாண வேண்டும். இந்த நெருக்கடி நீடிப்பதை அனுமதிக்கக் கூடாது," என்றார் மொகிதின் யாசின்.
என் மீது உங்களுக்கு கோபம் இருக்கும். நான் முன்பே எதிர்பார்த்தபடி ஒரு தரப்பினர் துரோகி என்று என்னைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நான் துரோகி அல்ல. எத்தகைய நெருக்கடியில் இருந்தும் நாட்டைக் காப்பாற்றவே நான் இருக்கிறேன். மலேசியாவை கட்டியெழுப்பவும், பழைய பெருமையை மீட்டெடுக்கவும் அனைவரும் இணைந்து செயல்படுவோம்," என்று மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்
மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், சீக்கியர்கள், பூர்வ குடிமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தாமே பிரதமர் என்று குறிப்பிட்ட அவர், விவசாயிகள், மீனவர்கள், தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் தாமே பிரதமர் என்றார்.
"அரசாங்கத்தையும் இந்த நாட்டையும் சரியான பாதையில் செலுத்த சற்று காலஅவகாசம் தேவைப்படுகிறது. எனது 40 ஆண்டுகால அரசியல் அனுபவத்தைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு அளியுங்கள். மகாதீரின் ஆதரவுடனேயே பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டேன். கடந்த சில தினங்களில் நடந்தது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. எனினும் எனது நேர்மை குறித்து கேள்வி எழக்கூடாது என்பதால் நடந்தவற்றை விளக்க முற்பட்டுள்ளேன்," என்றார் மொகிதின்.
ஊழல் கறைபடியாத, நிர்வாகத் திறனுள்ளவர்களுக்கு மட்டுமே தமது அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்றும், மலேசியாவில் உள்ள பல்லின மக்களைத் திருப்திபடுத்தும் வகையில் தமது அமைச்சரவை அமையும் என்றும் பிரதமர் மொகிதின் யாசின் உறுதியளித்தார்.
0 Comments
No Comments Here ..