ஆப்கானிஸ்தானில் 2001 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் திகதி தொடங்கிய போர் தொடர்ந்து 19 வது ஆண்டாக நீடிக்கிறது. இதற்கு முடிவு கட்ட விரும்பி தலீபான்களுடன், அமெரிக்கா நேரடி பேச்சு வார்த்தை நடத்தியது.
இதன் பலனாக கடந்த 29 ஆம் திகதி அன்று, கட்டார் நாட்டின் தலைநகரான டோஹாவில் அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில், அமெரிக்க தூதர் ஜல்மே கலீல்ஜாத்தும், தலீபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானியும் கையெழுத்து போட்டனர்.
இந்த ஒப்பந்தத்தில், தலீபான்கள் தங்கள் காவலில் உள்ள 1,000 ஆப்கானிஸ்தான் படை வீரர்களை விடுவிக்க வேண்டும், இதே போன்று ஆப்கானிஸ்தான் அரசு தனது காவலில் இருக்கிற 5,000 தலீபான்களை விடுவிக்க வேண்டும் என்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால் இதுபற்றி பேச்சுவார்த்தையின்போது தான் பேசிக்கொள்ள வேண்டுமே தவிர, இப்போது தலீபான்களை விடுவிக்க முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷரப் கனி கண்டிப்புடன் கூறி விட்டார். அது மட்டுமின்றி, பேச்சு வார்த்தைக்கு இதை ஒரு நிபந்தனையாக கூட வைக்க கூடாது என்று கூறி விட்டார்.
இதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் மீண்டும் தாக்குதல்களை தொடங்கி உள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தலீபான்களின் துணைத் தலைவர் முல்லா அப்துல் கானியுடன் நேற்று முன்தினம் தொலைபேசி வழியாக பேசினார்.
35 நிமிடம் நீடித்த இந்த பேச்சு வார்த்தையின் போது அவர், ஆப்கானிஸ்தானில் வன்முறை குறைந்ததால் தான் டோஹாவில் அமைதி ஒப்பந்தம் சாத்தியமானது, எனவே அங்கு வன்முறை கூடாது என வலியுறுத்தினார்.
அமைதி ஒப்பந்தத்தை பின்பற்றும் நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து தனது ஆதரவை அளிக்க தயாராக இருப்பதாகவும் அவரிடம் டிரம்ப் கூறினார்.
மேலும், ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஆப்கானிஸ்தான் அரசுடனும், மக்களுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் தலீபான்கள் பங்கேற்பது அவசியம் எனவும் டிரம்ப் குறிப்பிட்டார்.
இந்த தகவல்களை வாஷிங்டன் வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையொட்டி, அங்கு டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டியும் அளித்தார். அப்போது அவர், ‘‘தலீபான் தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்தது’’ என கூறினார்.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் ஹெல்மாண்ட் மாகாணத்தில் தொடர்ந்து தலீபான்கள் நடத்தி வருகிற தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கிற விதத்தில் அமெரிக்கா நேற்று அங்கு வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.
இருப்பினும் கடந்த 11 நாட்களில் தலீபான்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி இருப்பது இதுவே முதல் முறை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
0 Comments
No Comments Here ..