சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலிதான் கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு இந்த கொடிய வைரசுக்கு 350-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், 7,375 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற சுதந்திர நாடான வாடிகன் நகரிலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வைரஸ் பரவாமல் தடுக்க இத்தாலி அரசு மேற்கொண்டுள்ள கடுமையான நடவடிக்கைகளை வாடிகன் நகரமும் பின்பற்றி வருகிறது.
108 ஏக்கர் பரப்பளவு கொண்ட வாடிகன் நகரில் அருங்காட்சியகங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும் தேவாலயங்களில் நடத்தப்படும் பிரார்த்தனை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வழக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் இணைந்து தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கொரோனா பீதி காரணமாக நேற்று காலை தனது சிற்றாலயத்தில் தனியாக பிரார்த்தனை நடத்தினார். எனினும் அவரது பிரார்த்தனை நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
83 வயதான போப் ஆண்டவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருக்கும் சூழலில் அவருக்கு விரைவில் நோய் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பிரார்த்தனை கூட்டங்களை தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..