இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் Dupont Tyvek பாதுகாப்பு அங்கிகள், நைட்ரைல் கையுறைகள், கனரக பணிகளுக்கு பயன்படுத்தும் கையுறைகள், காலணி உறைகள், மற்றும் துப்பரவு பொருட்கள் அடங்கிய நன்கொடை ஒன்றை அமெரிக்க மக்களின் சார்பாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.ஏ. சந்திரசிறியிடம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கையளித்தார்.
இந்த உபகரணங்களானது விமானநிலைய உத்தியோகத்தர்களை பாதுகாப்பதற்கும் COVID-19 பரவுவதை தடுப்பதற்கும் உதவும். இந்த நன்கொடையானது இலங்கைக்கு உதவுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளின் ஓரங்கமாகும்.
´இந்த உலகளாவிய தொற்று நோய்க்கு எதிராக எமது இரு நாடுகளும் போராடுகின்றன என்ற வகையில், நாம் இலங்கையுடன் கூட்டுப் பொறுப்புணர்வுடன் நிற்கிறோம்,´ என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார். ´சவால்கள் எதுவாக இருந்தாலும் இலங்கையுடன் இணைந்து அவற்றுக்கு முகம்கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம்,´ என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொற்று நோய்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் அமெரிக்காவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை நிரூபிக்கும் வகையில், COVID-19 இற்கு எதிராக சர்வதேச ரீதியில் போராடுவதற்கு இருப்பிலுள்ள நிதியில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை செலவுசெய்வதற்கு அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
´அமெரிக்க தனியார் துறையினரால் பெருந்தன்மையுடன் நன்கொடை அளிக்கப்பட்ட கோடிக்கணக்கான டொலர்களுடன் கூடிய இந்த அர்ப்பணிப்பானது இந்த நோய் பரவலின் பதிலளிப்பு நடவடிக்கையில் அமெரிக்காவின் உறுதியான தலைமைத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,´ என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பேயோ தெரிவித்தார்.
இந்த உதவித் திட்டத்தை அறிவிக்கும் போதே அவர் இதை குறிப்பிட்டார். 2 மில்லியனுக்கும் அதிகமான சுவாச முகக்கவசங்கள், 11,000 பாதுகாப்பு அங்கிகள் மற்றும் 280,000 ஜோடி நைட்ரைல் கையுறகளை இந்த வைரஸ் தோற்றம் பெற்ற சீனாவுக்கு அமெரிக்க அமைப்புகள் பெப்ரவரி மாதத்தில் நன்கொடை அளித்துள்ளன.













0 Comments
No Comments Here ..