கொரோனாத் தொற்றுச் சோதனைக்காக யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விதி முறைகளை, பிரித்தானிய அரசாங்கம் தளர்த்திய பின்னர், மேலும் பல மில்லியன் கணக்கான மக்களுக்கு இன்று முதல் கொரோனாத்தொற்று தொடர்பான சோதனைக்குட்படும் வாய்ப்பு பிரிட்டனில் கிட்டியுள்ளது.
பேணகங்களில் வசிப்பவர்களும், அங்கு பணியாற்றும் ஊழியர்களும், தொற்றுக்கான அறிகுறிகள் அவர்களிடத்தில் தென்படாவிடினும் இந்தச் சோதனைக்குட்படும் தகுதியை பெற்றுக்கொள்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமிடத்து, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருப்பவர்கள் ஆகியோரும் தொற்றுக்கான சோதனை மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம்.
எதிர்வரும் திங்கள் வரை ஒரு நாளைக்கு 43,000 இற்குச் சற்று அதிகமான சோதனைகளே மேற்கொள்ளப்படும் நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமையிலிருந்து நாளொன்றுக்கு 100,000 வரையான சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தொழில்களில் ஈடுபடும் முதன்மைப் பணியாளர்கள், மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் என்போரைத் தாண்டி, இந்தச் தொற்றுக்கான சோதனை விரிவாக்கப்பட்டிருப்பதால், அரசாங்கத்தின் தொற்றுச் சோதனைக்கான இணையத்தளத்தின் மூலம், 25 மில்லியன் மக்கள் விண்ணப்பிக்க முடியும் என இந்தச் சோதனைகளை மேற்கொள்ளும் பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளார் பேராசிரியர் ஜோன் நியூட்டன் பி.பி.சி வானொலிக்குத் தெரிவித்துள்ளார்.
சோதனை திறன் தற்போது ஒரு நாளைக்கு 73,400 ஆக உயர்ந்துள்ளது என டவுனிங் ஸ்ரிட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..