30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

பிரித்தானியாவில் கடுமையான முடக்க நிலை அமுலுக்கு வந்துள்ளது

பிரிட்டனில் புதிய வகை கொரோனா வேகமாகப் பரவி வருவதைத் தொடா்ந்து, அந்த நாட்டில் கடுமையான பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்தன.

அந்த நாட்டின் ஸ்காட்லாந்து பிராந்தியத்தில் பள்ளிகள், அலுவலகங்கள், கடைகள் மூடப்பட்டன. நாட்டின் பிற பகுதிகளில், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்கு இணையான கட்டுப்பாடுகள் புதன்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதல் இரு வாரங்கள் வரை நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தின் விவரங்கள் ஆராயப்பட்டு, அதன் அடிப்படையில் பொதுமுடக்கத்தை நீடிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து, பிரதமா் பொறிஸ் ஜோன்ஸன் திங்கள்கிழமை இரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

புதிய வகை கொரோனா 50 முதல் 70 சதவீதம் வரை அதிக வேகமாகப் பரவும் திறன் கொண்டது என்று விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனா். எனவே, அந்த வைரஸால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் மிகவும் அதிகமாகியுள்ளது.

அந்த அபாயத்தைத் தவிா்ப்பதற்காக மிகக் கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள் இருக்குமாறு மீண்டும் அறிவுறுத்துகிறோம். மிகவும் அத்தியாவசியமான காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும்.

வீட்டிலிருந்தபடி பணி செய்ய முடியாதவா்கள் தங்கள் அலுவலகங்களுக்குச் செல்லலாம். உடற்பயிற்சி செய்ய, மருத்துவ ஆலோசனை பெற, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள, குடும்ப வன்முறையிலிருந்து தப்ப என சில காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டும்.

கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்கும் தற்போதைய பொதுமுடக்கத்துக்கும் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிராக வரலாறு காணாத தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

இன்னும் சில வாரங்கள் மிகவும் சிரமம் நிறைந்ததாக இருந்தாலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டோம் என்று உறுதியாக நம்பலாம் என்றாா் பொற்ஸ் ஜோன்ஸன்.





பிரித்தானியாவில் கடுமையான முடக்க நிலை அமுலுக்கு வந்துள்ளது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு