15,Jan 2025 (Wed)
  
CH
ஆரோக்கியம்

உளுத்தம்பருப்பின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்.!

உடலில் உளுத்துப்போன உடல் உறுப்புகளை வளர்க்கும் ஆற்றல் கொண்டதால் தா‌ன் இதற்க்கு உளுந்து என பெயர் வந்தது. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தானிய வகைகளில் உளுந்து முக்கிய இடத்தை வகிக்கிறது. உளுந்து வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம் ஆகும். உளுந்து தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இங்கேயே இது பெரும்பான்மையாகப் பயிரிடப்படுகிறது. உளுந்தில் வெள்ளை உளுந்து மற்றும் கருப்பு உளுந்து என இரண்டு வகைகள் உண்டு.

உளுந்தில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த நார்ச்சத்துக்கள் உணவினை நன்கு செரிக்கச் செய்வதுடன் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களையும் உடல் உறிஞ்ச உதவுகின்றன. மேலும் நார்ச்சத்தானது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.

செரிமான பாதையில் உள்ள செரிக்காத நச்சுப்பொருட்களை கழிவாக மாற்றி வெளியேற்றவும் உளுந்து உதவுகிறது. எனவே உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்து செரிமானம் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். உளுத்தம் பருப்பில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அதிலும் பெண்கள் உளுத்தம் பருப்பை சாப்பிடுவது மிகவும் நல்லது.

உளுத்தம்பருப்பின் பயன்கள்

1. கடுமையான மற்றும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.

2. உளுத்தம்பருப்புடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகபடியான சூடு தணியும்.

3. உளுந்து வடை பசியை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், மற்றும் பித்தத்தைக் குறைக்கும்.

4. சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

5. நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

6. உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.

7. 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.

8. உளுந்தில் உள்ள தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் உடலில் சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெற உதவுவதோடு உடலில் வலி உள்ள பகுதிகளை சரிசெய்கின்றன.

9. உளுந்துடன் முட்டை மற்றும் பஞ்சுடன் சேர்த்து எலும்பு முறிவுச் சிகிச்சைக்கு கட்டுப்போடும் பழக்கம் நாட்டு மருத்துவத்தில் உண்டு. மேலும் உளுந்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது உடலினை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.

10. உளுந்தம்பருப்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

11. உளுத்தம்பருப்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரும அழற்சி, பரு உள்ளிட்ட சருமக் காயங்கள், கரும்புள்ளிகள் உள்ளிட்ட சருமப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வை தரும்.

12. உளுத்தம்பருப்பில் உள்ள புரதச்சத்தானது தசைகளின் வளர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைகளை உறுதியானதாக மாற்றுகிறது. எனவே உளுந்தினை உண்டு ஆரோக்கியமான தசைகளைப் பெறலாம்.

13. உலர்ந்த பொலிவிழந்த முடியில் உளுந்தினைப் பயன்படுத்தும்போது அது முடிக்கு பொலிவையும், வலிமையையும் கொடுக்கிறது. மேலும் பாசி பயறுடன் உளுந்தினை சேர்த்து உபயோகித்தால் பொடுகு தொந்தரவு நீங்குவதுடன் கேசம் பளபளக்கும்.

14. உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக கர்பிணிகள் தங்களது உணவில் அடிக்கடி உளுந்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மேலும் இதில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, போலேட்டுகள் போன்றவை கர்பிணிக்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமனவையாகும். எனவே கர்ப்பிணிகள் உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.





உளுத்தம்பருப்பின் மருத்துவ பயன்கள் மற்றும் நன்மைகள்.!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு