சுகாதார தொண்டர் நியமனத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போலவும் ஏனையவர்களது முயற்சிகளில் நான் அரசியல் ஆதயம் தேடுவதற்கு முயற்சிப்பது போன்றும் ஒரு சில ஊடகங்கள் தமது சுயநல அரசியல் நோக்கங்களுக்காக கதையளந்து கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவை தொடர்பாக தான் அலட்டிக் கொள்வதில்லை என்பதுடன் நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபல தேசிய ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின்போது ஊடகவியலாளர் இது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
1990 ஆம் ஆண்டுகளின் நடுப் பகுதியில் இருந்து சுகாதார தொண்டர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் இன்றுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயம்.
யாழ்ப்பாண குடாநாடு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட பின்னர் யாழ்ப்பாணத்தில் சுகாதார தொண்டர்களின் தேவை உணரப்பட்ட காலத்தில் அப்போதைய சந்திரிக்கா அம்மையாரின் அரசாங்கத்துடன் பேசி சுகாதார தொண்டர்களை உள்வாங்கியவர்களே நாங்கள் தான். சுகாதாரத் தொண்டர்கள் மாத்திரமல்ல, தொண்டர் ஆசிரியர் நியமனங்கள், சமுர்த்தி நியமனங்கள் என்று பல்லாயிரக்கணக்கான அரச தொழில் வாய்ப்புக்களை எமது மக்களுக்கு கடந்த காலங்களில் பெற்றுக் கொடுத்தது நாங்கள் தான் என்பது தற்போது இருக்கிறன்ற பலருக்கு தெரியவில்லை அல்லது தெரியாதது போன்று இருக்கின்றார்கள் என்றே நினைக்கின்றன்.
எனினும் துரதிஸ்டவசமாக காலத்திற்கு காலம் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களும் இன்னோரன்ன காரணங்களினாலும் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனங்களைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்னை சுகாதார தொண்டர்கள் தொடர்ச்சியாக அணுகிக் கொண்டிருந்தனர். அவர்களின் கோரிக்கையை நான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டு சென்றிருந்தேன். அதுமட்டுமன்றி அமைச்சரவையிலும் சந்தர்ப்பம் கிடைக்கின்ற போதெல்லாம் பிரஸ்தாபித்திருந்தேன்.
இவ்வாறிருக்கையில், தங்களுடைய நியமனங்களை விரைவுபடுத்துமாறு கோரி சுகாதார தொண்டர்களில் ஒரு பகுதியினர் ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தினை ஆரம்பித்திருந்தனர்.
இதுதொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். அதேபோன்று அக்காலப்பகுதியில்; இடம்பெற்ற அமைச்சரவையிலும் நான் குறித்;த விடயத்தினை பிரஸ்தாபித்ததுடன் முடிந்தளவு விரைவில் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
குறித்த விடயம் தொடர்பிலே அவதானம் செலுத்திய ஜனாதிபதி, ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு திட்டத்தின் ஊடாக ஒரு பகுதியினருக்கான நியமனத்தை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்ததுடன், சேவை மூப்பு அடிப்படையில் பொருத்தமானவர்களின் பெயர்ப் பட்டியலை தயாரிக்குமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.
ஆனால் சில ஊடகங்கள் அரசியல் நோக்கங்களுக்காக சுகாதார தொண்டர் நியமனத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை என்பது போலவும் ஏனையவர்களுடைய முயற்சிகளில் நான் அரசியல் ஆதயம் தேடுவதற்கு முயற்சிப்பது போன்றும் கதையளந்து கொண்டிருக்கின்றார்கள். இவை தொடர்பாக நான் அலட்டிக் கொள்வதில்லை. நான் யார் என்பதை எனது மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..