08,May 2024 (Wed)
  
CH
உலக செய்தி

அபுதாபி வாகன விபத்து தொடர்பாக இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

அபுதாபியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை பெண்கள் உயிழரிழந்துள்ளதாக அங்குள்ள இலங்கை தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அபுதாபியில் நிறுவனம் ஒன்றில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு இலங்கை பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் மேலும் நான்கு பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளனர்.


இரண்டு இலங்கை பெண்கள் உட்பட இந்த நபர்களை ஏற்றிய சிறிய பேருந்து அபுதாபியில் இருந்து அல் ஷாஹாமா பிரதேசத்தில் உள்ள அவர்களில் தங்குமிடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் சென்ற கொள்கலன் வண்டியின் பின்னால் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.


விபத்து நடந்த இடத்திலேயே இலங்கை பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட இலங்கை பெண்களுக்காக இழப்பீடுகளை பெறுவது தொடர்பாக அவர்கள் பணிப்புரிந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


உயிரிழந்தவர்களின் உடல்களை துரிதமாக இலங்கைக்கு கொண்டு வர, மரணங்கள் சந்தேகத்திற்குரியவை அல்ல என்று கொல்லப்பட்ட பெண்களின் குடும்பத்தினரின் கடிதங்கள் அவசியம் என வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.


இந்த கடிதங்கள் கிடைத்த உடன் அவை அபுதாபி அரச அதிகாரிகளிடம் சமர்பிக்கப்படும். இதன்பின்னர் கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகம் ஊடாக மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இலங்கை பெண்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளாகும் விதம் தொடர்பான காட்சிகள் சீ.சீ. டிவி கெமராக்களில் பதிவாகியுள்ளன எனவும் இலங்கை தூதரகத்தின் தகவல்கள் கூறுகின்றன.




அபுதாபி வாகன விபத்து தொடர்பாக இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு