04,May 2024 (Sat)
  
CH
உலக செய்தி

அரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவிகளை துறக்கின்றனர். இதையொட்டி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அரச குடும்பத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தை சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் கூட்டி ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து ஹாரி, மேகன் தம்பதியரின் முடிவுக்கு ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார்.

மேலும் இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை, ராணி இரண்டாம் எலிசபெத் தரப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டது. அதில், வரும் வசந்த காலத்தின்போது (மார்ச்-ஜூன்), இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச பட்டங்களை துறக்கின்றனர், பொதுமக்களின் வரிப்பணத்தை எதற்கும் பெற மாட்டார்கள், வின்ட்சார் கோட்டை அருகே தங்களது இல்லத்தை புதுப்பிப்பதற்காக ஹாரி, மேகன் தம்பதியர் மக்கள் வரிப்பணத்தில் இருந்து பெற்ற பணத்தை திரும்ப அளித்து விடுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் பிரதிநிதியாக எந்தவொரு விழாவிலும் இளவரசர் ஹாரி பங்கேற்க முடியாது. அரச குடும்ப கடமைகள் எதையும் செய்யவும் மாட்டார்.

இளவரசர் ஹாரியின் மனைவி மேகனும், பிறந்து 8 மாதமே ஆன மகன் ஆர்ச்சியும் கனடாவில் வான்கூவர் தீவில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் இளவரசர் ஹாரியும் நேற்று கனடா சென்றார். அவர் வான்கூவரில் மனைவி மேகன் மற்றும் மகன் ஆர்ச்சியுடன் சேர்ந்து கொண்டார். இங்கு சில காலம் அவர்கள் இருப்பார்கள் என தெரிகிறது.

முன்னதாக நேற்று முன்தினம் இளவரசர் ஹாரி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசினார். இங்கிலாந்து-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்று பேசினார். இது அவர் இங்கிலாந்து இளவரசர் என்ற தகுதியில் இறுதியாக பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.

அறக்கட்டளை விருந்து நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். எதற்காக அரச குடும்ப கடமைகளை துறக்கிறார் என கோடிட்டு காட்டுகையில், அதைத் தவிர வேறு வழி எதுவும் தனக்கு இல்லை என்று உருக்கமாக குறிப்பிட்டார்.




அரச பட்டங்களை துறக்கும் இளவரசர் ஹாரி கனடா சென்றார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு