ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு மாகாணங்களில் கடந்த 4 மாதங்களாக காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த காட்டுத்தீயில் பல லட்சம் ஏக்கர் அளவிலான நிலப்பரப்பு எரிந்து நாசமானதோடு, ஆயிரக்கணக்கான வீடுகளும் தீயில் தரைமட்டமாகின. அதோடு லட்சக்கணக்கான வனவிலங்குகளும் செத்து மடிந்தன.
தற்போதும் அங்கு 80-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இந்த தீயை அணைப்பதற்கு அனைத்து வழிகளிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ எரிந்து வரும் இடங்களில் தண்ணீர் தெளிப்பதற்காக ‘ஹெர்குலஸ் சி 130’ ரக சரக்கு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் அமெரிக்காவை சேர்ந்த தன்னார்வ தீயணைப்பு வீரர்கள் 3 பேர் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. அதனை தொடர்ந்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதில் அங்குள்ள ஒரு மலைப்பாங்கான பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் அமெரிக்க வீரர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. விமானம் விபத்தில் சிக்கியது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து தீவிர விசாரணை நடத்த நியூ சவுத் வேல்ஸ் மாகாண தலைவர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..