21,Nov 2024 (Thu)
  
CH
சமையல்

இன்று உலக பிரியாணி தினம்

இன்னைக்கு ஒரு பிடி...! என்ற வசனம் எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ கண கச்சிதமாக பிரியாணி சாப்பிடும்போது பொருந்தும். உலகளவில் பலவகையான அறுசுவைமிக்க உணவுகள் இப்போதைக்கு இருந்தாலும், இனிமேல் வந்தாலும் சரி பிரியாணிக்கு இருக்கும் மவுசு என்றும் தனிதான்.


சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் மிகவும் பிரியமான உணவாகத்தான் பிரியாணி வலம் வந்து கொண்டிருக்கிறது.

வீட்டிலோ, ஓட்டலிலோ நல்ல கமகமவென வாசனையுடன், ஆவி பறக்க சுவைமிக்க பிரியாணி மற்றும் அதனுடன் கொஞ்சம் வெங்காய பச்சடியை வைத்து சாப்பிடும்போது....சொல்லவா வேண்டும். சுவையின் சுகத்தில் நாக்கு நடனமாடி ஒரு நிமிடம் உலகத்தையே மெய்மறக்க செய்துவிடும். அதனால் பிரியாணியை சாப்பிட பிடிக்காது என்று சொல்பவர்களே இருக்க வாய்ப்பில்லை. அசைவப்பிரியர்களுக்கு சிக்கன், மட்டன் பிரியாணி வகைகள் அலாதியான விஷயங்கள். உலகளவில் பிரியாணியில் பல வகைகள் உள்ளன. குறிப்பிடும்படியாக சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, மட்டன் பிரியாணி, பீப் பிரியாணி, காய்கறி பிரியாணி உள்ளிட்டவை இருப்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.


இந்தியாவை பொருத்தவரை கொல்கத்தா பிரியாணி, லக்னோ பிரியாணி, குஜராத் மிமோனி பிரியாணி, ஐதராபாத் தம்பிரியாணி, மலபார் பிரியாணி, தலச்சேரி பிரியாணி, தமிழ்நாட்டின் ஆம்பூர் பிரியாணி, திண்டுக்கல் தலப்பாக்கட்டு பிரியாணி ஆகிய பிரியாணிகள் மிகவும் பிரபலமானவை, மேலும் அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடியவை.

இதனால் இந்தியாவில் முக்கிய நகரங்களில் மேற்கொண்ட ஆய்வுகளில் அதிகம் பேர் ஆர்டர் செய்து சாப்பிட்ட உணவுகளில் பிரியாணிதான் முதலிடத்தில் உள்ளதாம். பிரியாணி என்பது உருது சொல் என்று கூறப்படுகிறது. மேலும் பிரியாணி தோன்றிய வரலாறுகள் பல்வேறு நாடுகளில், பல விதமாக கூறப்படுகிறது.


இதில் இந்தியாவில் பிரியாணியின் வரலாற்றை பார்க்கபோனால், பண்டைய கால மக்கள் அரிசி, நெய், மஞ்சள், மிளகு ஆகியவற்றுடன் இறைச்சியை சேர்த்து சமைத்து சாப்பிட்டுள்ளனர். இது ஊன்சோறு என்றழைக்கப்பட்டுள்ளது. இதுவே பின்னாளில் பிரியாணியாக மாறியதாக கூறப்படுகிறது. மேலும் முகலாய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவில் பிரியாணி உருவானதாகவும், குறிப்பிடும்படியாக போரின்போது மன்னர் ஷாஜகானின் மனைவி மும்தாஜ் வருகை புரிந்து வீரர்களின் நிலையை கண்டு வருந்தி அவர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் அரிசியுடன் மசாலா, இறைச்சி கலந்த உணவை தயாரித்து கொடுத்ததுதான் பிரியாணியாக மாறியதாக கூறப்படுகிறது.


எது எப்படியோ பிரியாணி தோன்றிய வரலாற்றைவிட, அவை சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அந்த வகையில் அசைவ பிரியர்களின் உணவு பட்டியலிலும், விழாக்களின் விருந்துகளிலும் முக்கிய உணவு வகையாக அங்கம் வகிக்கும் பிரியாணியை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதலாவது ஞாயிற்றுக்கிழமை உலக பிரியாணி தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி ஜூலை 2-ந்தேதியான இன்று(ஞாயிற்றுக்கிழமை) உலக பிரியாணி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.




இன்று உலக பிரியாணி தினம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு