முல்லேரியா பிரதேசத்தில் பெண்ணொருவரை கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று பொலிஸில் சரணடைந்த வர்த்தகர் மற்றும் கபுவாவை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு சப்புகஸ்கந்த பொலிஸாருக்கு மஹர நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணையில் இருவரது வாக்குமூலமும் முன்னுக்குப்பின் முரணாக உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசாரணையில் டி.ஜி. பிரதீபா என்ற 51 வயதுடைய என்ற பெண்ணின் கொலைச் சம்பவம் தொடர்பில் பல தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.
நேற்றைய தினம் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட வர்த்தகர் மற்றும் கபுவா ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போதே இது தெரியவந்துள்ளது.
இதன்போது, குறித்த பெண் வர்த்தகரை அடிக்கடி தொந்தரவு செய்வதாகவும், அவர் தொலைபேசியில் அடிக்கடி அழைப்பை ஏற்படுத்திய காரணத்தால் வர்த்தகர் நிம்மதி இழந்திருந்ததாகவும் சந்தேகநபரான கபுவா பொலிஸில் தெரிவித்தார்.
அதன்படி, “இந்தப் பிரச்சினையைத் தீர்ப்போம்” என்று வர்த்தகரிடம் கூறியதாகவும், அதற்காக மன்னா கத்தியை தயார் செய்ததாகவும் பொலிஸாரிடம் கபுவா தெரிவித்தார்.
குறித்த தினத்தில் வர்த்தகர் குறித்த பெண்ணை அவரது காரில் சபுகஸ்கந்த வீட்டிற்கு அழைத்து வந்ததாகவும், வீட்டில் உள்ள அறையொன்றில் இருந்து வெளியில் வந்த போது, மன்னா கத்தியால் பெண்ணை தாக்கியதாகவும் அவர் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்தார்.
பின்னர், அவர் நாற்காலி ஒன்றில் அமர்ந்து தொழிலதிபரின் பெயரை "சுதீர சுதீர" என்று அழைத்ததாக கபுவா விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
பெண்ணின் மரணத்திற்குப் பிறகு, சந்தேக நபர் இரத்தக் கறை படிந்த பகுதிகளைக் கழுவி, சுவர்களில் வர்ணம் பூசி, பெண்ணின் ஆடைகளை எரித்ததாக ஒப்புக்கொண்டார்.
அவரும் தொழிலதிபரும் சேர்ந்து உடலைத் துண்டித்து அன்றிரவு தொழிலதிபரின் காரில் எடுத்துச் சென்று உடலையும் மன்னா கத்தியையும் கொட்டுன்ன ஏரியுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் வீசியதாக கபுவா தெரிவித்தார்.
ஆனால் இச்சம்பவத்தில் பிரதான சந்தேக நபரான வர்த்தகரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தானும் பெண்ணும் உணவகத்தில் இருந்து காரில் வருவதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கடுவலைக்கு அருகில் உள்ள பாலம் ஒன்றின் அருகில் அவரை இறக்கி விட்டுச் சென்றதாக கூறினார்.
பின்னர் அவர் சபுகஸ்கந்த வீட்டிற்கு முச்சக்கர வண்டியில் வந்து கபுவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் வர்த்தகர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தான் வீட்டிற்கு வந்தபோது அந்த பெண் கபுவாவால் கொல்லப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.
அப்போது, கபுவாவை ‘நீ செய்தால் நீதான் ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என திட்டியதாகவும், பின்னர் உடலில் இருந்து கை கால்களை பிரித்து உடலை கால்வாயில் கொண்டு சென்று அங்கு வீசியதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.
இதன்படி, விசாரணையை தவறாக வழிநடத்தும் வகையில் சந்தேகநபர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் நேரடி மேற்பார்வையில் சபுகஸ்கந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒசித லங்கா டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 Comments
No Comments Here ..