நடப்பு நிதியாண்டான 2023-24ல் தெற்காசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை உலக வங்கி நேற்று வெளியிட்டது. இதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.3 சதவீதமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2022-23ம் நிதியாண்டில் 7.2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்த இந்தியாவின் ஜிடிபி, 2024ம் ஆண்டில் 6.3 சதவீதமாக இருக்குமென கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட உலக வங்கி அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
உலகளாவிய வளர்ச்சி விகிதம் குறைதல் மற்றும் உள்நாட்டில் விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் வளர்ச்சி குறைந்தாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கும் என உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதுதவிர, உணவுப் பொருட்களின் விலை படிப்படியாக குறையும் எனவும், ஒன்றிய அரசின் நடவடிக்கைகளால், உணவுப் பொருட்களின் விநியோகம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக வங்கி அறிக்கையில், விவசாயத் துறை 3.5 சதவீதமும், தொழில்துறை 5.7 சதவீதமும், சேவைகள் துறை 7.4 சதவீதமும் வளர்ச்சியை எட்டும் என்றும், முதலீட்டு வளர்ச்சி 8.9 சதவீதமாக வலுவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..