எம்பிலிபிட்டிய - கிரலவெல்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் நேற்று (02) பிற்பகல் வேனில் வந்த சிலரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். குறித்த குழுவினர் இளைஞரை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கூரிய ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் அந்த இளைஞரை தாக்கி வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். இளைஞனை கடத்தியவர்கள் அந்த வீடியோ காட்சிகளை அவரது உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதுடன், காட்சிகளைப் பார்த்த அவரது உறவினர்கள் எம்பிலிப்பிட்டிய பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்கவிற்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி குட்டிகல பொலிஸாரும் எம்பிலிப்பிட்டிய தலைமையக பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்து இளைஞன் தடுத்து வைக்கப்பட்டிருந்த காட்டுப்பகுதிக்கு சென்று அவரை மீட்டுள்ளனர். சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்கள் குழு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களுக்கு தகவல் வழங்கிய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் காயமடைந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்போது, வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பால் அவர் அனுமதிக்கப்பட்ட வைத்தியசாலையில் அமைதியின்மை ஏற்பட்டது.
கிரலவெல்கடுவ பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஏற்பட்ட மோதலை தீர்த்து வைப்பதற்காக இந்த இளைஞன் தலையிட்டதாகவும், இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 Comments
No Comments Here ..