வாகன விபத்திற்கு பழிவாங்கும் வகையில் புத்தளம் தட்டேவ பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர்.ஆனமடுவ நகர் பகுதியில் கார் பழுதுபார்க்கும் நிலையமொன்றை நடத்தி வரும் வர்த்தகர் மீதே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று (08) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
பணிக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஆனமடுவ தட்டேவ மயானத்திற்கு அருகில் அவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரின் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சுடப்பட்ட இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை மோட்டார் சைக்கிளில் சென்று தன்னை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அங்கிருந்த மக்களிடம் அவர் கோரியுள்ளார்.
இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
ஆனமடுவ பெத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த மல்லவ குமார என்ற 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளார்.தன்னால் ஏற்பட்ட கார் விபத்தில் காயமடைந்த ஜெயரத்ன தன்னை சுட்டதாக வைத்தியசாலை ஊழியர்களிடம் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, குறித்த நபரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகள் மற்றும் தந்தை ஆகியோருக்கு இந்த வர்த்தகர் பாரிய வாகன விபத்தை ஏற்படுத்தியிருந்தமை தெரியவந்துள்ளது.இதன் விளைவாக, குறித்த தாய் தற்போதும் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் உள்ள நிலையில் அவரது மகளுக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதற்கு பழிவாங்கும் நோக்கில் தந்தை இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேக நபரும் குறித்த விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தற்போது அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments
No Comments Here ..