13,May 2024 (Mon)
  
CH
SRILANKANEWS

சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி!

சுயமான தீர்மானத்துக்கு அமைய பணியாளர்களின் சம்பளத்தை அதிகரித்தமை தொடர்பில் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளிடம் நேற்று (05) பாராளுமன்றத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டது.சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், மத்திய வங்கியின் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய கூட்டத்தில் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கௌரவ லக்ஷ்மன் கிரியல்ல விடுத்த வேண்டுகோளுக்கு அமைய கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புதிய மத்திய வங்கி சட்டமூலத்தில் சுயாதீன தீர்மானமாக சம்பளத்தை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் இருந்த போதிலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைய குறித்த விடயத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்ற காரணத்தினால் இவ்விடயம் சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். இதன்படி, புதிய சட்டத்தில் மத்திய வங்கியின் பணிகளை சுயாதீனமாக மேற்கொள்ள ஏற்பாடுகள் உள்ள போதிலும், சுயாதீன தீர்மானத்தின் அடிப்படையில் சம்பளத்தை அதிகரிக்க எந்தவொரு இடத்திலும் அதிகாரம் இல்லையென அவர்கள் தெரிவித்தனர்.


இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் குறிப்பிடுகையில், சட்டத்தின் 5,8 மற்றும் 23வது பிரிவுகளில் அதற்கான ஏற்பாடுகள் இருப்பதாகவும், நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை தொடர்பில் சகல செலவீனங்களையும் ஈடுசெய்வதற்கு மத்திய வங்கியின் நிதியத்தைப் பயன்படுத்த சட்டத்தில் இடமிருப்பதாகவும் சுட்டிக்காட்டினர்.


எனினும், செலவீனங்கள் தொடர்பில் சட்டத்தில் ஏற்பாடுகள் இருந்தபோதிலும், சம்பளம் தொடர்பில் குறிப்பிட்ட ஏற்பாடுகள் இல்லையென கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். சட்டத்தின் 23வது பிரிவுக்கு அமைய சம்பள அதிகரிப்பை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு இருந்தாலும் அதற்கான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளதாக கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.


மேலும், இந்த செலவுகள் மத்திய வங்கி நிதியத்திலிருந்து மேற்கொள்ளப்படும் என்றும், ஒருங்கிணைந்த நிதியில் இருந்து அல்ல என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய வங்கியின் நிதியைப் பயன்படுத்துவதற்கு இந்தச் சட்டத்தில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நீண்ட நேரம் விடயங்களை விளக்கினர்.


மத்திய வங்கியின் நிதியம் இறுதியில் மக்களின் நிதியாக இருப்பதால் அது தொடர்பில் மக்களுக்கும் பொறுப்புக்கூற வேண்டும் எனவும், அதற்கமைவாகப் பொது நிதிக்கு பொறுப்பான பாராளுமன்றத்தின் அங்கீகாரம் தேவை எனவும் கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.


தொழிற்சங்கம் மற்றும் நிர்வாகத்திற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்துக்கு (Collective Agreement) அமைய ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு தடவையும் இவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதாகவும், முன்னைய வருடங்களிலும் இது சம்பிரதாயமாக மேற்கொள்ளப்பட்டு வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். எதுவாக இருந்தாலும், இவ்வாறான ஒப்பந்தத்தை சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளும் பொருட்டு தொழில் அமைச்சில் பதிவுசெய்ய வேண்டும் என்றும், அவ்வாறான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் கேள்வியெழுப்பப்பட்டது. எனினும், அவ்வாறான அனுமதி எதுவும் பெறப்படவில்லையென அதிகாரிகள் குறிப்பிட்டனர். தொழில் அமைச்சில் பதிவு செய்வதன் மூலம் மாத்திரமே இவ்வாறான கூட்டு ஒப்பந்தமொன்றை செயற்படுத்த முடியும் எனவும் கட்சித் தலைவர்கள் இதன்போது தெரிவித்தனர்.


இருந்தபோதும், புதிய சட்டத்தின் ஊடாக மத்திய வங்கியை சுயாதீனப்படுத்துவதன் மூலம் எதிர்பார்க்கப்பட்டது சுயாதீனமான முடிவுகள் எடுத்து சம்பளத்தை அதிகரித்துக்கொள்வது அல்ல என்றும், அரசியல் தலையீடுகள் இன்றி நாட்டின் பொருளாதாரம் தொடர்பான சரியான கொள்கைகளை வகுக்கப்படும் என்பதேயாகும் எனக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.


ஏதாவது ஒரு விதத்தில் சட்டத்தின் ஊடாக அனுமதி இருந்தாலும், நாடும் நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணர்வற்ற வகையில் இவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தார்மீகப் பொறுப்பற்றது என்றும், இதனை அனுமதிக்க முடியாது என்றும் கட்சித் தலைவர்கள், மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஒரு பிரிவினருக்கு மாத்திரம் இந்தளவு வரப்பிரசாதங்களை வழங்குவது ஒருபோதும் அனுமதிக்க முடியாதது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


அத்துடன், இந்த சம்பள அதிகரிப்பின் காரணமாக மாதமொன்றுக்கு மேலதிகமாக ஏறத்தாள 232 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது.




சம்பள அதிகரிப்பு தொடர்பில் அதிகாரிகளிடம் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு