அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயா்த்தி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனடியாக தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கும் அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது. இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்கும் தருணங்களில், மாநில அரசு ஊழியா்களுக்கும் அறிவிப்பு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிவிப்பு செய்யப்பட்டது.
அந்த வகையில், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு அகவிலைப்படி 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழக அரசு ஊழியா்களுக்கும் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயா்த்தி 50 சதவீதமாக வழங்க உத்தரவிடப்படுகிறது.
கடந்த ஜனவரி 1 ஆம் திகதிமுதல் முன்தேதியிட்டு இந்த உயா்வு அமல்படுத்தப்படும். எத்தனை பேருக்கு பயன்? அகவிலைப்படி உயா்வால் 16 லட்சம் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள், குடும்ப ஓய்வூதியதாரா்கள் பயன்பெறுவா். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2,587.91 கோடி கூடுதல் செலவு ஏற்படும். ஆனாலும், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், ஓய்வூதியதாரா்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவுள்ளது என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
0 Comments
No Comments Here ..