முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (28) சிறைத்தண்டனை விதித்துள்ளது. போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக இனம்காணப்பட்டார். இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்திருந்தது.
இதன்படி 4 குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாக இனம்காணப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட், குற்றவாளி என நீதவான் நீதிமன்ற நீதிபதி பிரசன்ன அல்விஸ் அறிவித்துள்ளார். ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பொலிஸ் சார்ஜன்ட் மீது ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 5,000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், லஞ்சமாகப் பெற்றுக் கொள்ளப்பட்ட 500 ரூபாவை பண அபராதமாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறும் நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..