புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிங்கள, தமிழ் புத்தாண்டு தொடங்கும் இந்த வாரம் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் பலர் தங்கள் கிராமங்களுக்கு செல்ல தயாராக உள்ளனர். அவர்களுக்காக இம்முறையும் விசேட தொலைதூர போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றன.
இதற்கமைய பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை 1,400 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது. மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக 12 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் பதுளைக்கு 2 விசேட புகையிரதங்கள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்தார்.
இதேவேளை, பெலியத்தவில் இருந்து மருதானை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் 4 விசேட ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும், ஏப்ரல் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு மேலதிக ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், ஏப்ரல் 13 ஆம் திகதிக்கு பின்னர் கொழும்புக்கு வரும் மக்களின் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டு கஸ்வர்ணஹன்ச தெரிவித்தார்.
0 Comments
No Comments Here ..