ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறந்ததாகவும், இதன் பின்னர் தான் ஜேர்மனிய தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது பிறப்புச்சான்றிதழில் உள்ள இலங்கை பெயர் வாசனா மல்காந்தி எனவும், மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோர் ஜேர்மனிய தம்பதியினரிடம் தத்துக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், தனது பிறப்புச் சான்றிதழின் படி, தாய் கம்பஹா மாகாணத்தில் வசிப்பதாகவும், கண்டியில் பிறந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தந்தை மொரந்துடுவ பிரதேசத்தை சேர்ந்த நபர் எனவும், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையின் பின்னர் அவர் தந்தை இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பல நகரங்களில் தனது தாயை தேடி வருவதாகவும், வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் தகவல் வெளியிட்டும், அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 14 வருடங்களாக தாயை தேடி வருவதாகவும், தான் ஒவ்வொரு முறையும் இலங்கைக்கு வரும்போதும் தனது தாயார் இருப்பார் என்ற நம்பிக்கையில் வைத்தியசாலைக்கு செல்வதை மறப்பதில்லை எனவும் கூறியுள்ளார்.
அம்மாவை ஒருமுறை பார்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளதாகவும், தன்னை பெற்ற தாயின் குறையை உணர்ந்து அவரை ஒருமுறை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும், பலர் தனது தாய் எனக்கூறி முன்வருவதால், டி.என்.ஏ பரிசோதனை செய்து உறுதிப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். எனவே தன்னை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0711 31 78 33 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..