சீரற்ற வானிலை காரணமாக மலையகத்திற்கான இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இன்று (25) ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே துணைப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) இந்திபொலகே இதனை தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்று கொழும்பில் இருந்து பதுளைக்கும் பதுளையிலிருந்து கொழும்புக்கும் இயக்கப்படவிருந்த இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரவில் புறப்படவிருந்த விசேட ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால், இவ்வாறு இரவு நேர அஞ்சல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. 15 முதல் 20 இடங்களில் ரயில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்து கிடப்பதாகவும், ரயில்வே சிக்னல் அமைப்பை செயல்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நானுஓயாவிற்கு அப்பால் உள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே மின்சாரம் இன்றி சிக்னல்கள் இயங்காததால் ரயில்வே கடவையில் பயணிக்கும் சாரதிகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் இல்லாமல் அல்லது சிவப்பு சிக்னலுடன் மின்சார மணிகள் தொடர்ந்து ஒலிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், ரயில் கடவைகளை கடக்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சாரதிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
0 Comments
No Comments Here ..