சீனாவின் ஹூபேய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உள்ளது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
கொரோனா வைரசுக்கு இதுவரை 908 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 40 ஆயிரத்து 640 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது மருத்துவ அதிகாரிகளால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களிடையே கடுமையான அச்சம் நிலவிவருகிறது.
இந்நிலையில், ரஷியாவில் ஹரொமெட் டஸ்புரோவ் என்ற நபர் சமூக வலைதள பக்கத்தில் அதிக 'லைக்’குகள் வர வேண்டும் என்பதற்காக மிகவும் ஆபத்தான வேலையில் இறங்கியுள்ளார். அவர் தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து மாஸ்கோ சுரங்க ரெயிலில் ஏறியுள்ளார்.
தனது முகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் அணிவது போன்ற முகமூடியை அணிந்துகொண்டு ரெயிலில் பயணம் செய்துள்ளார். டஸ்புரோவின் நடவடிக்கைகளை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர்.
ரெயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகள் அதிகம் இருந்த இடத்திற்கு வந்த அவர் திடீரென மயங்கி விழுந்து, வலிப்பு வருவது போல நடித்துள்ளார். உடனடியாக அவரது நண்பர்கள் பயணிகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 'கொரோனா வைரஸ், கொரோனா வைரஸ்’ என கூச்சலிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்களுக்கும் வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் ரெயில் அடுத்த நிலையத்தை அடைந்த உடன் அதில் இருந்து அலறிடித்துக்கொண்டு ரெயிலை விட்டு வெளியேறி வேகமாக ஓடினர். ஆனால், இது ஒரு 'பிராங் வீடியோ’ என தெரிந்த பின்னர் பயணிகள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
0 Comments
No Comments Here ..