இலங்கையை சர்வதேச விசாரணைக்குட்படுத்த அமெரிக்கா உரிய அழுத்தங்களை வழங்கவேண்டுமென மரபுரிமைப் பேரவை அமைப்பின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவரக அரசியல் பிரிவு அதிகாரியான அன்ரனி நேற்று(வியாழக்கிழமை) முல்லைத்தீவிற்கு விஜயம் செய்திருந்தார்.
அவரை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மரபுரிமைப் பேரவை அமைப்பின் இணைத் தலைவர்களுள் ஒருவரான விஜயகுமார் நவநீதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை கலந்துகொண்டுள்ள சூழ்நிலையில் தமிழ் மக்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக அவருடன் பேசியிருக்கின்றோம்.
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள், போர்க் குற்றங்கள், இன அழிப்புக்கள் போன்ற விடயங்களுககெதிராக அமெரிக்கா இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்கின்ற வகையிலே ஒரு சர்வதேச விசாரணையினையை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை கொடுக்கவேண்டும் என்ற செய்தியினை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றோம்.
ஒரு பாதிக்கப்பட்ட இனமாக இருக்கின்ற தமிழர்கள், அமெரிக்கா போன்ற சர்வதேச வல்லரசுகளினுடைய அனுசரணையுடன்தான் எங்களுடைய உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..