சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 60 நாடுகளில் பரவி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,943 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் பலி எண்ணிக்கை 3100ஐ தாண்டி உள்ளது. சீனாவுக்கு வெளியே அதிகபட்சமாக ஈரானில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில் 28 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. வாஷிங்டன் மாநிலத்தில் கொரோனா வைரசால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 5 பேர் கிங் கவுண்டியைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒருவர் சினோஹோமிஷ் கவுண்டியைச் சேர்ந்தவர்.
கொரோனா தாக்கம் அதிகரித்ததால், கிங் கவுண்டியில் சுகாதார அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு, சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்று மாநில கவர்னர் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கான விமான பயண கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வரும் பயணிகள் அனைவருக்கும், அவர்கள் புறப்படும் விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறியுள்ளார்.
இத்தாலியில் 1700 பேரும், தென் கொரியாவில் 4000 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பதால் அரசு இந்த புதிய பயண நெறிமுறைகளை அமல்படுத்த உள்ளது.
இது ஒருபுறமிருக்க, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஏராளமான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், விரைவில் மருந்துகள் சந்தையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..