பிரதமர் மோடி அறிவித்த 21 நாள்கள் ஊரடங்கு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என மோடி நேற்று அறிவித்தார்.
மேலும் பாதிப்பு குறைவான இடங்களில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் சிலவற்றில் தளர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல் நெறிமுறையில் பல்வேறு விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
முக்கியமாக ஊரகப் பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் உணவு, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் நடைபெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நகர, மாநகரப் பகுதிகளில் மாநில அரசின் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயப் பணிகளுக்கு எந்தவித தடையும் இல்லை, காபி, தேயிலை தோட்டங்களில் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. விவசாயப் பொருள்களை சந்தைப் படுத்தவும் எந்தவித தடையும் இல்லை.
உணவு, மருத்துவத் துறைக்கு அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைச் சார்ந்த வாகனங்கள் இயங்கவும் அனுமதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேறு மாநிலம், மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்திற்கு விதிக்கப்பட்ட தடை தொடரும். பேருந்து, ரயில், விமானம் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்கிறது. தனியார் வாகனங்கள் இயங்க மாநில அரசின் அனுமதி பெற்றே இயங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டும் செல்ல வேண்டும் என்றும், நான்கு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் தொடர்ந்து நடைபெறலாம். குறிப்பாக விவசாயம், பாசனம் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..