ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக அதிகரித்து வரும் டிரோன் தாக்குதல்களால் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, ரஷ்ய போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ரோமன் ஸ்டாரோவாய்ட், ஜனாதிபதி விளாடிமிர் புடினால் அதிரடியாக நீக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தனது காருக்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் ரஷ்யா-உக்ரைன் சண்டையில், இரு நாடுகளும் பரவலாக டிரோன் தாக்குதல்களைப் பயன்படுத்தி வருகின்றன. இதனால் விமானப் போக்குவரத்தை மிகவும் நேர்த்தியாகக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில், ரஷ்யாவின் ஏராளமான விமானங்கள் தரையிறக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்தச் சூழலிலேயே ரோமன் ஸ்டாரோவாய்ட் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கடந்த வருடம் மே மாதம்தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த ரோமன் ஸ்டாரோவாய்ட், அதற்கு முன்னதாக சுமார் ஐந்து வருடங்கள் குர்ஸ்க் பிராந்தியத்தின் கவர்னராகச் செயல்பட்டு வந்தார். தற்போது, நவ்கோரோட் பிராந்தியத்தின் முன்னாள் கவர்னரான அன்ட்ரெய் நிகிடின் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
No Comments Here ..