“யாழ் மாவட்டத்தில் இருந்து தெரிவான இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்திற்கு மாறாக“ என அதில் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்
அதாவது, தானும், சி.சிறிதரனும் சொலமன் சூ.சிறிலை ஆதரித்ததாகவும், அந்த முடிவை மீறி ஜனநாயக விரோதமாக ஆனால்ட்டை தெரிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்த தகவல் தவறானது.
சொலமன் சூ.சிறிலை ஆதரித்தவர்களில் சி.சிறிதரனும் ஒருவர் என்பது உண்மை. காரணம், சிறிதரனை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களில் சிறிலும் ஒருவர். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கோட்டாவிற்குள்ளாளேயே சிறிதரன் அரசியலுக்குள் நுழைந்து வேட்பாளரானார். அப்போது சந்திப்புக்களிற்கு சிறில் உதவியிருந்தார்.
எனினும், அண்மைய நாட்களில் சிறிதரனின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, அவர் ஆர்னோல்ட்டை ஆதரித்தார். ஆனால்ட் நேரில் சிறிதரனுடன் பேசிய பின்னர், இந்த நிலைப்பாட்டு மாற்றத்தை எடுத்தார்.
தனது நிலைப்பாட்டு மாற்றத்தை அவர் நேரடியாக கட்சி தலைவரிடமும் சொல்லியிருந்தார்.
யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் 16 பேரில் 15 பேரும், தமிழ் அரசு கட்சி பிரமுகர்களில் சுமந்திரனை தவிர்த்த ஏனையவர்களும் ஆர்னோல்ட்டை ஆதரித்தார்கள். இது ஜனநாயக மீறல் என்கிறார். அதாவது “ரணிலின் ஜனநாயக காலவனான“ சுமந்திரனையும், அவரது அணியை சேர்ந்த ஒருவரின விருப்பத்தையும் நிறைவேற்றாதது ஜனநாயக விரோதம் என்கிறார்..
2 முறை வரவு செலவு திட்டத்தில் தோல்வியடையும் தலைவர், சாதாரண உறுப்பினராகுவார் என உள்ளூராட்சி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் தேர்தல் நடத்தப்படும் போது, எந்த வகையான உறுப்பினர்கள் போட்டியிடலாமென்பதில் சட்டரீதியான வரையறைகள் கிடையாது. அதனால் ஆர்னோல்ட் போட்டியிட்டது, சுமந்திரன் குறிப்பிட்டதை போல சட்ட முரணானது அல்ல.
தவிரவும், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் முன்னிலையிலேயே தெரிவு இடம்பெற்றது. ஆர்னோல்ட் சட்ட முரணான தெரிவு எனில், ஆணையாளர் அதற்கு அனுமதித்திருக்க மாட்டார்.
மேலும், “மாநகரசபை உறுப்பினர்களில் அநேகமானவர்கள் திரு ஆர்னோல்டையே திரும்பவும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று விரும்புவதாகவும், இறுதித்தீர்மானம் எடுப்பதற்காக காலை 10.30 மணிக்கு கூட்டம் ஒன்று நடத்தப்போவதாகவும் சொன்னீர்கள். நான் கொழும்பில் இருந்து பிரயாணமாகி வந்துகொண்டிருக்கின்றேன் என்றும் மதியம் 01.00 மணிக்குப் பின்னரே யாழ்ப்பாணத்திற்கு வந்தடைவேன் என்றும் அதற்குப்பின்னர் கூட்டத்தை நடாத்தினால் நான் கலந்து கொள்வேன் என்றும் உங்களுக்கு நான் அறியத்தந்தேன்“ என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் என்ன விதமான பேச்சுவார்த்தை நடந்தது என்பது தொலைபேசி தரவு வெளியாகாத பட்சத்தில் மூன்றாம் நபர்களிற்கு உண்மை தெரிய வராது.
எனினும், மாவை தரப்பு தகவல்களின்படி – “கொழும்பிலிருந்து வருகிறேன. கிளிநொச்சியில் நிகழ்வு உள்ளது. நான் வர 1.00 மணியை விட தாமதமாகும்“ என்றுதான் சுமந்திரன் கூறினார் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கு இரண்டு விதமான பொருள் கொள்ள முடியும்- 1. நான் வர தாமதமாகும் நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள். 2.நான் வர தாமதமாகும் கூட்டத்தை ஒத்திவையுங்கள் என்பது.
கூட்டத்தை ஒத்திவைக்கும்படி சுமந்திரன் எந்த சந்தர்ப்பத்திலும் தன்னை கேட்கவில்லையென மாவை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையில், கட்சியின் மிகப்பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுத்த மாவையை ஜனநாயகத்தின் காவலன் என ரணிலை விட அதிகமாகவல்லவா சுமந்திரன் கொண்டாடியிருக்க வேண்டும்?
0 Comments
No Comments Here ..