11,May 2024 (Sat)
  
CH
விளையாட்டு

ஆமதாபாத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் இரண்டு நாளுக்குள் முடிந்ததால், ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது...

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக ஆமதாபாத், மோடி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 112, இந்தியா 145 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 81 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி 49/0 ரன்கள் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

இரண்டு நாட்களுக்குள் போட்டி முடிந்ததால் ஆடுகளம் குறித்து பெரியளவில் சர்ச்சை கிளம்பி வருகிறது. இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறுகையில்,‘‘முதல் இன்னிங்சில் ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாகத்தான் இருந்தது, ஒருசில பந்துகள் தான் திரும்பின. மற்றபடி இருதரப்பிலும் பேட்டிங் சுமாராகத் தான் இருந்தது. இங்கு வீழ்ந்த 30 விக்கெட்டுகளில், 21 விக்கெட்டுகள் நேராக வந்து பந்துகளில் கிடைத்தன. இந்திய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி பெற்றோம்,’’ என்றார்.

இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் கூறுகையில்,‘‘ஆண்டர்சன், பிராட் பவுலிங்கை கோஹ்லி எப்படி சமாளிக்கப் போகிறார், ஸ்டோக்சிற்கு எதிராக அஷ்வின் எப்படி பந்துவீசுவார் என்பதை காண, 60,000 ரசிகர்கள் திரண்டனர். இவர்கள் அனைவரையும் ஏமாற்றி விட்டோம். 100வது டெஸ்டில் பங்கேற்ற இஷாந்த் சர்மா 5 ஓவர்கள் தான் வீசினார். நான் ஐந்து விக்கெட் வீழ்த்தியதை பார்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.  

பொதுவாக சொந்தமண்ணில் பங்கேற்கும் அணிக்கு சற்று சாதகமாக ஆடுகளம் இருக்கும் என்பது எதிர்பார்த்தது தான், ஆனால் பல முன்னணி வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்த வாய்ப்பே இல்லாமல் போனது, மிகப்பெரிய அவமானம். இவ்விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தலையிட்டு முடிவெடுக்க வேண்டும்,’’ என்றார்.

இதற்கு இந்திய அணி துவக்க வீரர் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,‘‘அவுட்டான பேட்ஸ்மேன்களில் பெரும்பாலானவர்கள் நேராக வந்த பந்துகளில் தான் வீழ்ந்துள்ளனர். அவர்கள் மட்டுமல்ல, நாங்களும் பேட்டிங் செய்யும் போது முதல் இன்னிங்சில் பல்வேறு தவறுகள் செய்தோம். மற்றபடி ஆடுகளத்தில் ஒன்றுமில்லை. இது பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இதில் தாராளமாக ரன் குவிக்கலாம்,’’ என்றார்.

இந்திய அணி ‘ஜாம்பவான்’ கவாஸ்கர் கூறுகையில்,‘‘கிராலே, ரோகித் சர்மா என இருவரும் இந்த ஆடுகளத்தில் தான் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணியினர் எப்படி ரன்கள் எடுப்பது என்பதற்குப் பதிலாக, அவுட்டாகாமல் இருப்பது எப்படி என்று தான் சிந்தித்தனர். சுழற்பந்து வீச்சிற்கு எதிராக விளையாடும் போது ‘கிரீஸ்’ பகுதியை அதிகம் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் தான் உங்கள் திறமையை சோதிக்கும். இந்திய வீரர்களும் சுழலுக்கு திணறினர். பந்தில் அதிக திருப்பம் ஏற்படும் போது, பேட்ஸ்மேன்கள் முன்வந்து விளையாட வேண்டும். இப்படிச் செய்தால், அம்பயர் அவுட் தருவதற்கு முன், பத்து முறைக்கு அதிகமாக யோசிப்பார். தவிர இதுபோன்ற ஆடுகளங்களில் ஒரு சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடக் கூடாது,’’ என்றார்.

ஐ.சி.சி., ஆடுகள விதிப்படி, ‘பேட்டிங், பவுலிங் என இரண்டுக்கும் சம வாய்ப்பு வழங்காமல் இருப்பது மோசமான ஆடுகளம் எனப்படும். அதாவது பேட்டிங்கிற்கு முழு சாதகமாக இருப்பது அல்லது சுழல், வேகப்பந்து வீச்சிற்கு அதிகமாக கைகொடுப்பது, தவிர இரு அணி வீரர்களும் ரன் குவிக்க உதவாமல் இருப்பது, துவக்கத்திலேயே சுழலுக்கு அதிகமாக கைகொடுக்கும் ஆடுகளங்கள் மோசம்,’ என அறிவிக்கப்படும். 

டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யு.டி.சி.,) தொடரில் ஆடுகளங்கள் உள்ளூர் அணிக்கு சாதகமாக, மோசமாக அமைக்கப்பட்டால் புள்ளிகள் குறைக்கப்படும்,’ என 2019ல் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தெரிவித்தது. இதனால் இந்திய அணியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி குறைக்கப்படும் என அஞ்சப்படுகிறது. 

எனினும் ஆமதாபாத் ஆடுகளம் மோசம் என ஐ.சி.சி., தெரிவித்தாலும், இந்தியாவுக்கான புள்ளி குறைக்கப்படாது என்றே தெரிகிறது. ஏனெனில் டபிள்யு.டி.சி., விதிப்படி,‘ஆடுகளம், மைதான பகுதி விளையாட தகுதியற்றது என்ற காரணத்திற்காக போட்டி கைவிடப்பட்டால், உள்ளூர் அணி தோற்றது அல்லது அன்னிய அணி வென்றதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படும். தவிர கைவிடப்பட்ட போட்டி ‘டிரா’ ஆனதாக அறிவித்து புள்ளிகள் பகிர்ந்து தரப்படும்,’ என்று தான் தெரிவித்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜார்ஜ் லோமண். 1888–1896 வரை பங்கேற்ற 18 டெஸ்டில் 112 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பவுலிங்கில் இவரை ‘பிராட்மேன்’ என்பர். பவுலிங் சராசரி 10.75 ஆக உள்ளது. தற்போது 125 ஆண்டுக்குப் பின் 2 டெஸ்டில் 18 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் அக்சர் படேல். இவரது பவுலிங் சராசரி 9.44 ஆக உள்ளது.

ஆமதாபாத் ஆடுகளத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நன்றாக தண்ணீர் தெளிக்கப்பட்டது. சுழற்பந்து வீச்சாளர்கள் பந்தை ‘பிட்ச்’ செய்யும் இடங்கள் நன்றாக வறண்டு காணப்பட்டன. இதனால் சென்னை ஆடுகளத்தை விட, சுழற் பந்துகள் அதிக வேகம் மற்றும் பவுன்சராக சென்றன. 

தோல்விக்கு ஆடுகளம் தான் காரணம் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தெரிவிக்க, அங்குள்ள பத்திரிகைகள், வீரர்களை கடுமையாக விமர்சித்துள்ளன. இதுகுறித்து வெளியான செய்திகள்:

இரண்டு நாட்களில் தோல்வி எனும் போது இதற்கு எளிதாக பதில்கள் தர முடியாது. இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் பல்வேறு விஷயங்கள் தவறாக நடந்தன. இந்த மோசமான தோல்விக்கு எதைக் காரணமாக சொல்வது, என முடிவு செய்வது கடினம். 

சுழற்சி முறை என்ற பெயரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது தவறு. மூன்றாவது டெஸ்டில் 74/2 என இருந்து, கடைசியில் சுழற்பந்து வீச்சில் எதிர்ப்பின்றி ‘சரண்’ அடைந்து விட்டனர்.





ஆமதாபாத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் இரண்டு நாளுக்குள் முடிந்ததால், ஆடுகளம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு