21,Mar 2026 (Sat)
  
CH
இலங்கை செய்தி

ஐ.பி.எல்., லீக் போட்டியில் பிரித்வி ஷா 82 ரன் விளாச டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் டில்லி, கோல்கட்டா அணிகள் மோதின. டில்லி அணியில் தோள்பட்டை காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமித் மிஸ்ராவுக்கு பதிலாக லலித் யாதவ் தேர்வானார். கோல்கட்டா அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ரிஷாப் பன்ட் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.


சுப்மன் ஆறுதல்: கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா, சுப்மன் கில் ஜோடி துவக்கம் தந்தது. ரபாடா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ராணா, அக்சர் படேல் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 25 ரன் சேர்த்த போது அக்சர் ‘சுழலில்’ ராணா (15) சிக்கினார். இஷாந்த் சர்மா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டிய சுப்மன் கில், அக்சர் பந்தில் ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இரண்டு பவுண்டரி மட்டுமே அடித்த ராகுல் திரிபாதி (19), ஸ்டாய்னிஸ் வேகத்தில் வெளியேறினார். ஆட்டத்தின் 11வது ஓவரை வீசிய லலித் யாதவ் இரட்டை ‘அடி’ தந்தார். இந்த ஓவரின் 2வது பந்தில் கேப்டன் இயான் மார்கனை (0) அவுட்டாக்கிய இவர், 4வது பந்தில் சுனில் நரைனை (0) போல்டாக்கினார். சுப்மன் கில் (43) நம்பிக்கை தந்தார்.


ரசல் அசத்தல்: அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (14) நிலைக்கவில்லை. இஷாந்த் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஆன்ட்ரி ரசல், ரபாடா வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் அடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், அவேஷ் கான் வீசிய கடைசி பந்தை சிக்சருக்கு பறக்கவிட்டார்.


கோல்கட்டா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 154 ரன் எடுத்தது. ரசல் (45 ரன், 4 சிக்சர், 2 பவுண்டரி), கம்மின்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி சார்பில் அக்சர் படேல், லலித் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


பிரித்வி விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் 6 பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா, சுனில் நரைன் வீசிய 4வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய இவர், 18 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு, ஷிகர் தவான் ஒத்துழைப்பு தர அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. முதல் விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது பாட் கம்மின்ஸ் ‘வேகத்தில்’ தவான் (46) அவுட்டானார்.

அடுத்து வந்த கேப்டன் ரிஷாப் பன்ட், பிரசித் கிருஷ்ணா வீசிய 15வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். கம்மின்ஸ் வீசிய 16வது ஓவரில் பிரித்வி ஷா (82 ரன், 3 சிக்சர், 11 பவுண்டரி), ரிஷாப் (16) அவுட்டாகினர். பிரசித் கிருஷ்ணா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்டாய்னிஸ் வெற்றியை உறுதி செய்தார்.


டில்லி அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் (6) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட் சாய்த்தார்.




ஐ.பி.எல்., லீக் போட்டியில் பிரித்வி ஷா 82 ரன் விளாச டில்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு