கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் இன்று பாராளுமன்ற விவாதம் நடைபெறாது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவகாரம் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன் பிரகாரம் நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இன்று காலை பத்து மணியில் இருந்து பிற்பகல் 4.30 வரை நடத்துவதற்குத் தீரமானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க கூறினார்.
இந்த விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் இதுவரை சபாநாயகருக்கு கிடைக்கவில்லை.
இதன் பிரகாரம் விவாதத்தை இன்று நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைத்ததும் எதிர்வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது குறித்த சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.
நாட்டில் நிலவும் கொவிட் நெருக்கடி நிலை காரணமாக விவாதத்திற்கான பாராளுமன்ற அமர்வு நேற்று நடைபெற்றதுடன் இன்று மட்டும் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரம் தொடர்பான செயற்குழு கடந்த வெள்ளிக்கிழமை தீர்மானித்திருந்தது
0 Comments
No Comments Here ..