ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை -அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்தில் அதன் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு செய்யப்பட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு
இலங்கை – அவுஸ்திரேலிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவுசெய்யப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை -அவுஸ்திரேலியா நட்புறவு சங்கத்தைப் புதுப்பிக்கும் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தன, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஜோன் ஹோலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக ஆகியோரின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் கனக்க ஹேரத் புதிய செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முசம்மில், ஹெக்டர் அப்புஹாமி மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உப தலைவர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டனர். இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ பொருளாளராகவும், வைத்தியகலாநிதி உப்புல் கலப்பதி பிரதி செயலாளராகவும் தெரிவாகினர்.
இலங்கை சமூகத்தைச் சேர்ந்த 170,000 பேர் அவுஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக்கு அதிகப்படியான பங்களிப்புக்களைச் செய்து வருவதாக இங்கு உரையாற்றிய சபாநாயகர் சுட்டிக்காட்டினார். “நாம் தொலைதூரத்தில் உள்ள இரு கண்டங்களின் நண்பர்களாக இருந்தாலும், எமது மக்களின் இதயங்களுக்கு நெருக்கமாக அவுஸ்திரேலியா உள்ளது. 12,000ற்கும் அதிகமான இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவில் கல்வி கற்பதுடன், மேலும் பல மாணவர்கள் உங்கள் நாட்டில் உயர்கல்வியைத் தொடர்வதற்கு விரும்புகின்றனர். எங்கள் மக்கள் மீது உங்கள் நாடு காண்பித்துவரும் அக்கறைக்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்” எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..