மட்டக்களப்பு பிராந்தியத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதுடன், 21 கொவிட் நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று 07.05.2021 வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இவ்வாராக இனங்காணப்பட்டுள்ள 21 பேரில் 08 பேர் மட்டக்களப்பு வைத்திய அதிகாரி பிரிவிலும், வெல்லாவெளி, செங்கலடி மற்றும் ஓட்டமாவடி பிரிவுகளில் தலா 03 பேர் வீதமும், காத்தான்குடியில் ஒருவருமாக, கோறளைப்பற்று மத்தியில் ஒருவரும், களுவாஞ்சிகுடியில் 02 பேருமாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அதே வேளை கடந்த 24 மணித்தியாலங்களில் மரணித்துள்ள இருவரும் மட்டக்களப்பு வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கலென்பதுடன், இருவரும் 69 வயதையுடைய ஆண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1209 பேர் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், 13 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன் 210 பேர் தொடர்ந்தும் சிகிட்சை பெற்றுவருகின்றனர். இவர்களின் 988 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கொவிட் மூன்றாவது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 16 நாட்களில் 226 கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் ஒரு வாரத்தில் 135 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
கடந்த 16 நாட்களில் 3 மரணங்கள் சம்பவித்துள்ளதுடன் தேசிய ரீதியில் இறப்பு வீதமானது ஒரு வீதத்திற்கும் குறைவாக காணப்படுகின்ற போதிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் மரண வீதமானது ஒரு வீதத்திற்கும் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
பொது மக்கள் கொவிட் மூன்றாவது அலையின் பாரிய ஆபத்தை அறிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், குறிப்பாக நோன்பு காலங்களில் ஒன்று கூடல்களை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும், முகக்கவசத்தை அணிந்து கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 1000 கட்டில்கள் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் தயார்படுத்தப்பட வேண்டியுள்ள நிலையில் 400 நோயாளர்களை பராமரிக்ககூடிய வகையிலேயே உள்ளதாகவும், அதற்கு அமைவாக எமது பிராந்தியத்தில் இரண்டு பிரதேச வைத்தியசாலைகள் கொவிட் நோயாளர்களுக்காக தயார்படுத்தப்படவுள்ளதுடன், மற்றும் இரண்டு ஆதார வைத்தியசாலைகளின் சிறு பிரிவுகளை கொவிட் 19 தொற்று நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் 700 கட்டில்களை எமது பிராந்தியத்தில் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
07.05.2021
0 Comments
No Comments Here ..