இலங்கையில் அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்தை முதல்கட்டத்தில் பெற்ற பலருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருதொகை ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளை ரஷ்யாவிடம் இருந்து இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதன்பிரகாரம் ஒரு இலட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் எதிர்வரும் செவ்வாய் கிழமை நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் அஸ்ராசெனகாவின் முதலாவது தடுப்பூசி 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும் இரண்டாம் கட்ட தடுப்பூசி 2 இலட்சத்து 92 ஆயிரத்து 457 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் சைனோபாம் தடுப்பூசி 4 இலட்சத்து 24 ஆயிரத்து 823 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் 2 ஆம் கட்ட தடுப்பூசி 2 ஆயிரத்து 435 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது.
'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசியானது 14 ஆயிரத்து 691 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்துவரும் ஓரிரு வாரங்களில் அஸ்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்று இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தருமான அருந்திக்க பெர்ணான்டோ கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அஸ்ராசெனகா இரண்டாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது நெருக்கடிமிக்கதாக உள்ளது. எனினும் உலக சுகாதார ஸ்தாபன தலைவரிடம் ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்திருக்கின்ற அதேவேளை ஏனைய சில நாடுகளுடனும் இராஜதந்திர ரீதியிலான பேச்சுக்கள் நடத்தப்பட்டு தற்போது மகிழ்ச்சியான பதில்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்னும் ஓரிரு வாரங்களில் இரண்டாம் கட்ட அஸ்ராசெனகா தடுப்பூசித் தொகை கிடைக்கும் என நம்புகின்றோம். இதுவரை 15 இலட்சம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்புட்னிக் மற்றும் சைனோபார்ம் தடுப்பூசிகளை ரஷ்யா மற்றும் சீனா நாடுகள் வழங்கின. 130 இலட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்
0 Comments
No Comments Here ..