இலங்கையில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று நெருக்கடியானது, ஆளும் கட்சிக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராணுவத்தின் வசமுள்ள கொவிட் தடுப்பு பணிகளை சுகாதாரத் துறைக்கு வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆணடு மார்ச் 11ஆம் திகதி கொரோனா தொற்றுப் பரவல் கண்டறியப்பட்டதில் இருந்து கொவிட் ஒழிப்பு பணிகளை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வழங்கியிருந்தார்.
எனினும் சுகாதாரத்துறைக்கு இராணுவம் இடமளிப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு ஒருசில எதிர்ப்பு நடவடிக்கையை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்த போதிலும் அதில் வெற்றிகாண முடியாமற் போனது.
இந்நிலையில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை பரவிவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படுகின்ற கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளதுடன், நாளாந்த உயிரிழப்புக்களும் 30 ஆக பதிவாகி வருகின்றது.
இந்த நிலையில் கொழும்பை மையமாக கொண்ட தனியார் ஊடகமொன்றிற்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான டிலான் பெரேரா, இராணுவத்திடம் இருந்து கொவிட் தொற்று ஒழிக்கும் பணிகளை பறிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
சுகாதாரத் துறைக்கு சம்பந்தப்படாத அதிகாரிகளின் சேவைகள் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ளப்படுகின்றன. எனினும் இப்போதாவது அமைச்சரவை மற்றும் சுகாதாரத்துறை இணைந்து உடனடி தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
கொவிட் ஒழிப்பு விவகாரத்தில் இராணுவத்தளபதி, இராணுவ அதிகாரிகள் முதலாம், இரண்டாம் கொரோனா அலைகளை கட்டுப்படுத்த சிறப்பான சேவைகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போதும் இராணுவத் தளபதிக்கு எதிராக பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். இருப்பினும் தற்போது மூன்றாவது அலை ஏற்பட்ட விதம் மற்றும் மேற்குலக நாடுகளின் மருத்துவர்களும் உள்நாட்டு மருத்துவர்களும் வெளியிட்டு வருகின்ற கருத்துக்கள் மற்றும் உள்நாட்டு தேசிய மருந்துகள் குறித்து வெளியாகின்ற கருத்துக்களைப் பார்க்கின்றபோது இப்போது இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுடன் உதவியுடன் தீர்மானம் எடுக்கின்ற அதிகாரத்தை சுகாதாரத் துறையினருக்கே வழங்க வேண்டும்.
அதற்கான திருப்புமுனை நேரம் இன்று வந்துவிட்டது என்றார்.
0 Comments
No Comments Here ..